எனக்கு ஏதாவது நேர்ந்தால்அ .தி.மு.க. தலைமைதான் பொறுப்பு. சசிகலா புஷ்பா அதிரடி பேட்டி
கடந்த இரண்டு நாட்களாக திருச்சி சிவாவை அதிமுக எம்.பி. கன்னத்தில் அறைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தனது உயிருக்கு அதிமுக தலைமையால் ஆபத்து என்றும், தனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு தலைமைதான் பொறுப்பு என்றும் டெல்லி செய்தியாளர்களிடம் சசிகலா புஷ்பா அதிரடி பேட்டி அளித்துள்ளார். அவரது பேட்டியின் முழுவிபரம் இங்கே:
“எனது லீடரை பற்றி தவறாகப் பேசியதால் சிவாவிடம் நான் அப்படி நடந்து கொண்டேன். ஆனால் எனது தலைவரே எனக்கு சப்போர்ட் பண்ணவில்லை என்பது மிகுந்த வேதனையான ஒன்று. யாருக்கோ இந்தப் பதவியை தர நினைக்கிறார்கள். ஆனால் அதற்காக கம்பெல் பண்ணி என்னிடமிருந்து ராஜினாமா வாங்க நினைக்கிறார்கள். எனது குடும்பத்தினரே இப்போது பயந்துள்ளார்கள். ’தமிழ்நாட்டில் சி.எம்-ஐ எதிர்த்துப் போராட முடியாது. அவங்க கொடுத்த பதவியை திருப்பிக் கொடுத்திடு’ என்கிறார்கள். ஏற்கெனவே செரினா என்ற பெண்ணின்மீது என்ன என்ன வழக்குகள் பாய்ந்தன என்பதும் சின்ன மேடம் சசிகலாவின் கணவரே ஜெயிலில் எவ்ளோ நாள் இருந்தார் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.
கார்டனில் இருந்து நேரடியாக டெல்லி அழைத்து வரப்பட்டேன். எனது மொபைல் போனை பிடுங்கி வைத்துக் கொண்டார்கள். டெல்லியிலும் என்னை வீட்டுக்குப் போகவிடவில்லை. நான் சண்டை போட்டுத்தான் வீட்டில் உட்கார்ந்து இருந்தேன். எனக்கு மிரட்டல் இருக்கிறது. அது தொடரும். வேறு ரூபத்திலும் நடக்கும்.
அவையில் காங்கிரஸ், பி.எஸ்.பி., காங்கிரஸ் தலைவர்கள் சோனியாஜி, ராகுல்ஜி என்று எல்லோரும் எனக்கு சப்போர்ட் பண்ணி இருக்காங்க. அது எனக்கு நம்பிக்கையைக் கொடுத்து இருக்கு. வெங்கய்யா நாயுடுஜி எனக்குப் பாதுகாப்புக் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். கனிமொழியும் எனக்கு முழு சப்போர்ட் கொடுத்தார். எனக்கோ எனது குடும்பத்தினருக்கோ ஏதாவது நேர்ந்தால், அதுக்கு அ.தி.மு.க. தலைமைதான் பொறுப்பு.
என் மீதான நடவடிக்கை ரெண்டு மாதம் முன்பிருந்தே தொடங்கியது. பார்லிமென்ட்டில் என்னைப் பேசக் கூடாது என்று கார்டனில் இருந்து பூங்குன்றன் சொன்னார். எனது இந்தப் பதவியை வேறு யாரோ ஒருவருக்கு கொடுக்க விரும்புகிறார்கள். ஆனால், கண்டிப்பாக திருச்சி சிவா மேட்டருக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. என்னைப் பற்றி தவறாக தொடர்ந்து சி.எம்.-மிடம் யாரோ சொல்லி இருக்கிறார்கள். வாட்ஸ்-அப் படங்களும் திட்டமிட்டு அனுப்பி இருக்காங்க. அது தொடர்பாக கட்சித் தலைமையிடம் நான் புகார் கொடுத்தேன். ஆனால் என்னைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நான் ஏன் என் எம்.பி. பதவியை ராஜினாமா செய்யவேண்டும். ஜெயா டிவியிலயே, ’சசிகலா புஷ்பா தலைமையில் மகளிர் அணி சிறப்பாகச் செயல்படுகிறது. அதற்கு அம்மா பாராட்டினார்’ என்றும் செய்தி வெளியானது. எனது வாழ்வையே அதிமுகவுக்கு கொடுத்துள்ளேன். அப்போதே அம்மாவிடம் சொன்னேன். எனக்கு மகளிர் அணி வேண்டாம் என்று. ’நீதான் இதைச் சரியா பண்ண முடியும் என்று நம்புகிறேன்’ என்று சொன்னார். அந்தச் சொல்லுக்காக தெருத் தெருவாக அலைந்து கட்சி வேலைப் பார்த்தேன். இப்போது, ’ஜஸ்ட் ரிசைன் பண்ணு’ என்றால் எப்படி முடியும்? அப்போ நான் படித்த படிப்புக்கு, கட்சிக்காகச் செய்த வேலைக்கு என்ன அர்த்தம். திருச்சி சிவா விஷயத்தை இப்போது பயன்படுத்திக் கொண்டார்கள்.
கார்டனில் எனக்கு நடந்தது அத்தனையும் உண்மை. கம்பெல் செய்து ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கினார்கள். அங்கு எனக்கு நடந்தது வேறு. சிவாவிடம் நடந்த விசயம் குறித்து, ’என் மேல இவ்ளோ பாசமா’ என்று அம்மா கேட்பார் என்று நினைத்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக என்னை மிரட்டி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். நான் என்ன தப்புப் பண்ணினேன். பர்சனல் வேற. பொலிட்டிக்கல் வேற. என்னை ராஜினாமா செய்யச் சொன்னதுக்கும் திருச்சி சிவா விஷயத்திற்கும் சம்பந்தமில்லை. அதனால்தான் பார்லிமென்ட்டில் நான் மன்னிப்பு கேட்டேன்!
நான் யாருடைய மிரட்டலுக்கும் பயந்து ராஜினாமா செய்யமாட்டேன், அம்மா நடந்துகொண்ட விதம் எனக்குப் பிடிக்கவில்லை. என்னை அசிங்கப்படுத்தி ராஜினாமா செய்ய வற்புறுத்துகிறார்கள். அதனால் எம்.பி. க்கு உள்ள உரிமையோடு நான் நீதிக்காகப் போராடுவேன்’ இவ்வாறு அவர் கூறினார்