ஆனந்திபென் பலிகடா ஆக்கப்பட்டார். ராகுல்காந்தி அதிரடி குற்றச்சாட்டு
குஜராத் முதல்வர் ஆனந்திபென், நேற்று குஜராத் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். வயது முதிர்வு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறப்பட்டது. ஆனால் ராஜினாமாவிற்கு பின்னர் அவருக்கு ஓய்வு கொடுக்காமல் அவரை தமிழக கவர்னராக நியமனம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதிலிருந்தே அவர் ராஜினாமா செய்ததற்கு வேறு காரணம் உள்ளதாக தெரியவருகிறது என காங்கிரஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி கூறியபோது, “குஜராத் முதல்வர் பதவியில் இருந்து ஆனந்திபென் படேல் ராஜினாமா செய்திருப்பதன் மூலம் அவரை பலியாடு ஆக்கியுள்ளது தெளிவாக தெரிகிறது. குஜராத்தில் பாஜகவை காப்பாற்றிவிட முடியாது இந்த ராஜினாமா ஒன்று மட்டும் போதாது என்று தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலமே பற்றி எரிவதற்கு கடந்த 13 ஆண்டு கால நரேந்திர மோடியின் ஆட்சிதான் காரணம். கடந்த இரண்டு ஆண்டுகளாக குஜராத்தை ஆளும் ஆனந்திபென் படேலின் ஆட்சி இதற்குக் காரணமல்ல. ஆனந்திபென் படேலை பலி கொடுப்பதால் மட்டும் குஜராத்தில் பாஜகவை காப்பாற்றிவிட முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
தனது வயது காரணமாக, முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாகவும், இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவே இந்த முடிவை எடுத்ததாகவும் ஆனந்திபென் படேல் கூறியிருப்பது சுத்தப்பொய் என்றும் இதை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும் காங்கிரஸ் கட்சியினர் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.