கருவிலிருந்தே ஆரோக்கியம் – அந்த 1000 நாட்கள்!

கருவிலிருந்தே ஆரோக்கியம் – அந்த 1000 நாட்கள்!
12
பாப்பாவைக் காக்க 10 வழிகள்

‘இந்தியா ஏழை நாடு அல்ல; ஏழைகளின் நாடு’ என்றார் நேரு. நம் குழந்தைகள் மண் சாப்பிடுவதும், பல்ப்பம் சாப்பிடுவதும் குறும்புக்காக மட்டும் அல்ல. அதற்குப் பின் ஊட்டச்சத்துக் குறைபாடு என்ற தீவிரமான பிரச்னையும் உள்ளது. இன்று, ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது உலகம் முழுவதுமே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது. ‘உலக அளவில், ஐந்து வயதுக்குள் உயிரிழக்கும் குழந்தைகளில் 45 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இறக்கிறார்கள்’ என்று கவலை தெரிவித்து உள்ளது ‘உலக சுகாதார ஆய்வு நிறுவனம்.’

குழந்தை பிறந்த பிறகு அதற்கு சத்தான உணவு அளிப்பது மட்டுமே ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தவிர்க்கும் என்று நினைத்தால், அது தவறு. கருத்தரித்ததில் இருந்து, 1,000 நாட்கள் வரையிலான காலகட்டம்தான் ஒரு குழந்தையின் ஆரோக்கியமான எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது.  அதாவது, தாயின் வயிற்றில் இருக்கும் 270 நாட்கள், பிறந்த பிறகு முதல் இரண்டு வருடங்கள் (730 நாட்கள்) என மொத்தம் 1,000 நாட்கள் ஒரு குழந்தையின் வளர்ச்சியில் மிக முக்கியமானவை.

‘ஒரு குழந்தையின் முதல் 1000 நாட்கள்தான் அந்தக் குழந்தையின் சுகாதாரம், ஊட்டச்சத்து, புத்திக்கூர்மை, அறிவாற்றல், உயரம், பள்ளியில் செயல்படும் விதம், வாழ்நாளில் தனிநபரை எதிர்கொள்ளும் திறன், உணர்வு மேலாண்மை, சமூகத் தொடர்பு, பழக்கவழக்கம் மற்றும் அணுகுமுறை ஆகியவற்றை முடிவு செய்கிறது எனப் பல்வேறு ஆராய்ச்சிகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்கிறது யுனிசெஃப் நிறுவனம்.

கர்ப்ப காலம் (முதல் 270 நாட்கள்)

தாயின் வயிற்றில் உள்ள குழந்தை, ஊட்டச்சத்துக்காகத் தாயையே நம்பி இருக்க வேண்டி உள்ளது. ஃபோலிக் அமிலம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், இரும்புச்சத்து உள்ளிட்ட உணவுகளை எடுப்பதன் மூலம் மூளை உள்ளிட்ட உறுப்புக்கள் நன்கு வளர்ச்சியடையும். குழந்தை பிறக்கும்போது, அதன் மூளையில் 100 பில்லியனுக்கும் அதிகமான நியூரான்கள் இருக்கும். இந்தக் காலகட்டத்தில் எல்லாவகையான உணவுகளையும் எடுத்துக்கொள்வதால், குழந்தையின் நுகர்தல், சுவைத்தல் திறன் அதிகரிக்கும்.

அடுத்த 730 நாட்கள் செய்ய வேண்டியவை

1. குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில்…

சுகப்பிரசவமாக இருந்தால், குழந்தை பிறந்த உடனே, 10-15 நிமிடங்களுக்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். சிசேரியனாக இருந்தாலும், ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியம்.

தமிழ்நாட்டில் வெறும் 54.7 சதவிகிதம் குழந்தைகளுக்கு மட்டுமே ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கிடைக்கிறது என்கின்றன ஆய்வின் முடிவுகள்.

பிரசவங்கள் 34 சதவிகிதம் சிசேரியன் மூலமாக நடப்பதால், ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்கப்படுவது இல்லை.

தாய்க்கு சுரக்கும் முதல் பாலை சீம்பால் அல்லது கொலஸ்ட்ரம் (Colostrum) என்பார்கள். சீம்பால் கெட்டது என்று நினைத்து, குழந்தைக்குக் கொடுப்பது இல்லை. இது தவறு. குழந்தை பிறந்ததும் முதலில் சுரக்கும் வெளிர் மஞ்சள் (பழுப்பு) நிற சீம்பால், ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. கட்டாயம் இதைக் குழந்தைக்குப் புகட்ட வேண்டும்.

சர்க்கரைத் தண்ணீர்,  கழுதைப்பால், பசும்பால் போன்றவற்றைத் தரக் கூடாது.

2. ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே

தாய்ப்பால் குழந்தையின் நோய் தடுப்பு மருந்தாகும். தடுப்பூசியை விட அதிக சக்தி வாய்ந்தது. முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகளுக்கு தொற்று, நிமோனியா, குடல் நோய்கள், அலர்ஜி, காதுகளில் தொற்று வரும் வாய்ப்பு 43 சதவிகிதம் குறைவு.

தாய்ப்பாலில் இம்யூனோகுளோபுளின் (Immunoglobulin) என்ற நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. முதல் 10 நாட்களுக்கு இதன் அளவும் அதிகமாக இருக்கும். பிறந்த மூன்று மாதங்களில், குழந்தையின் எடையை இரண்டு மடங்கு அதிகரிக்க, தாய்ப்பாலால் மட்டும்தான் முடியும்.

தாய்ப்பால் குடித்த குழந்தைகள், இளம் பருவத்தில் அறிவுசார் தேர்வுகளில் நன்றாகச் செயல்படுகின்றனர்.

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தை மரணம் தடுக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் சர்க்கரை நோய், இதய நோய், ஆஸ்துமா, புற்றுநோய் உள்ளிட்ட நாட்பட்ட நோய்கள் வரும் வாய்ப்பு குறைகிறது.

குழந்தையின் மூளை செயல்திறனை மேம்படுத்தி, அவர்களின் எதிர்காலம் சிறப்புடன் இருக்க, தாய்ப்பால் உதவுகிறது.

தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு ஏற்படும் நன்மைகள்

கர்ப்ப காலத்தில் அடைந்த உடல் எடையை விரைவாக இழக்க முடியும். பழைய உடல் வடிவத்தைத் திரும்பப் பெற முடியும்.

மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், டைப் – 2 சர்க்கரை நோய் தாக்கும் அபாயங்கள் குறைகின்றன.

ரத்தப்போக்கை குறைத்து, இயல்பு நிலைக்குத் திரும்ப உதவுகிறது.

தாய்ப்பால் அளிப்பது, தற்காலிக கர்ப்பத்தடையாகச் (Natural Contraceptive) செயல்படுகிறது. தாய்ப்பால் புகட்டும் காலம் வரை கர்ப்பம் அடைவதைத் தடுக்கிறது.

தாய்க்கும் குழந்தைக்குமான உறவை வலுப்படுத்தி, தாய்மையே அழகு என்பதை உணர வைத்துவிடும்.

3. ஏழாவது மாதத்திலிருந்து திட உணவு

ஆறு மாதங்களுக்குப் பிறகு, தேவையான சத்துக்களைப் பெற, தாய்ப்பால் மட்டும் போதாது. தாய்ப்பாலுடன் சேர்த்து, திட உணவுகளைக் கொடுப்பதால், குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும். உணவுகள் மூலம் இரும்புச்சத்து கொடுக்கப்பட வேண்டும்.

ஒரு நாளைக்கு சராசரியாக ஐந்தாறு முறை உணவு அளிக்க வேண்டும். குழந்தை வளர வளர, உணவு நேர எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ளலாம்.

பருப்பு, தானியங்கள், பழங்கள், வேக வைக்கப்பட்ட காய்கறிகள், முட்டை, காரம் இல்லாத மீன், இறைச்சி, வேகவைத்த கேரட், உருளைக் கிழங்கு, பரங்கிக்காய் ஆகியவற்றைத் தரலாம்.

4. இரும்பு மற்றும் ஃபோலிக்சத்து

குழந்தைப்பேறுக்குத் தயாராவதற்கு முன்பு இருந்தே ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இது, குழந்தையின் மூளை, முதுகெலும்பு, நரம்புமண்டல வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.

கோழி, ஆடு போன்றவற்றின் ஈரல், கோழிமுட்டை, கடல் உணவுகள் ஆகியவற்றில் இரும்புச்சத்து அதிகம்.

இலை வகை பச்சைக் காய்கறிகளான முட்டைக்கோஸ், பீட்ரூட், கேரட், முள்ளங்கி, நூல்கோல், கீரைகள், வெல்லம், உலர்பழங்கள், பருப்பு, பயறு வகைகள், தாமரைப் பூவின் தண்டு ஆகியவற்றில் இரும்புச்சத்துக்கள் உள்ளன. சைவ உணவுகளில் இருந்து நமக்கு இரும்புச்சத்து கிரகிக்கப்படுவது வெறும் இரண்டு சதவிகிதம்தான்.

இரும்புச்சத்து உடலில் கிரகிக்க வேண்டும் எனில், வைட்டமின் சி தேவை. இதற்கு, உணவுக்குப் பின் சாத்துகுடி, ஆரஞ்சு, நெல்லி, கொய்யா போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுக்க வேண்டும். தேநீர், காபி, கோகோ  போன்றவை இரும்புச்சத்து கிரகிக்கப்படுவதைத் தடுக்கும்.

4. அயோடின் சத்து

அயோடின் குறைபாட்டால், கழுத்துக்கழலை, கருச்சிதைவு, குழந்தை பிறப்பின்போதே மரணம், பிறவிக்குறைபாடு, கேட்கும் திறன், பேச்சுத்திறன், ஐக்யூ, மூளை வளர்ச்சிப் பாதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, தினசரி உணவில் அயோடின் சத்து கிடைப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

அயோடைஸ்டு உப்பு, கடல்வாழ் உணவுகள், தயிர், ஸ்ட்ராபெர்ரி, உருளை, முட்டை ஆகியவற்றில் அயோடின் சத்துக்கள் உள்ளன.

5. ஐந்து தடுப்பூசிகள் அவசியம்

ஒரு வருடத்துக்குள் தடுப்பூசிகளைச் சரியான தருணத்தில் போடுவதால், எட்டுவிதமான நோய்களிலிருந்து காக்க முடியும்.

குழந்தை பிறந்தவுடன் பிசிஜி, ஹெபாடைட்டிஸ் – பி, பென்டாவேலன்ட் 1, 2, 3, போலியோ ஓரல் 1,2,3, தட்டம்மை, வைட்டமின் ஏ டோஸ் போட்டுவிட வேண்டும்.

6. சுத்தமான கைகள்

சாப்பிடும் முன் மற்றும் கழிப்பறையைப் பயன்படுத்திய பின் சோப் போட்டுக் கை கழுவுவது முக்கியம். ஏனெனில், ஒரு கிராம் மலத்தில் ஒரு லட்சம் கோடி வைரஸ், பாக்டீரியா உள்ளன. வெறும் தண்ணீரால் கைகளைக் கழுவுவது போதாது. எனவே, சோப்பு போட்டுக் கழுவுவதால் மட்டுமே கைகளில் படிந்திருக்கும் கிருமி, அழுக்கு, கரை நீங்கும்.

சோப்பு போட்டுக் கை கழுவுவதால்  வயிற்றுப்போக்கு, நிமோனியா, டைபாய்டு, புழுத்தொற்று, மஞ்சள் காமாலை, சருமப் பாதிப்பு, கண் தொற்று போன்றவை தடுக்கப்படுகின்றன. இந்தப் பழக்கத்தைச் சரியாகப் பின்பற்றினாலே, குழந்தைகளின் இறப்பை 41 சதவிகிதம் வரை குறைக்கலாம்.

7. கழிப்பறைப் பயன்பாடு முக்கியம்

தமிழ்நாட்டில் உள்ள மக்கள் தொகையில் ஏறக்குறைய பாதிப்பேர் (45.7 சதவிகிதம்) திறந்தவெளியில் மலம் கழிக்கின்றனர்.

இதனால், கோடி கோடியாக பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் சுற்றுச்சூழலில் கலக்கின்றன. எனவே, அனைவரும் கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளின் மலத்தைக்கூட, கழிப்பறையிலேயே கொட்டி அப்புறப்படுத்தும் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.

8. சுகாதாரமான குடிநீர்

பாதுகாப்பற்ற குடிநீர், சுகாதார வசதி பற்றாக்குறை, மோசமான சுகாதார நடைமுறைகளால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு 88 சதவிகித உயிரிழப்புகள் நேர்கின்றன.

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எனவே, நன்கு காய்ச்சி, வடிகட்டிய நீரைக் கொடுக்க வேண்டும். இதனால், தண்ணீரால் ஏற்படும் நோய்கள் வருவது தடுக்கப்படும். கேன் வாட்டர், பியூரிஃபைடு பில்டர் வாட்டர் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

9. வைட்டமின் ஏ சத்து மாத்திரை

வைட்டமின் ஏ கூடுதலாக வழங்குவதால், குழந்தை இறப்பை 24 சதவிகிதம் குறைக்க முடியும்.  ஒன்பது மாதங்கள் முதல் ஐந்து வயது வரையில், குழந்தைக்கு ஒன்பது முறையாவது வைட்டமின் ஏ டோஸ் தர வேண்டும். இது மீன் மாத்திரை போல எண்ணெயாக இருக்கும். டியூப்களாகக் கடைகளில் கிடைக்கும்.

ஆறு வயதுக்குப் பிறகு கேரட், பப்பாளி, இறைச்சி, மீன், முட்டை, கீரைகள் ஆகிய வைட்டமின் ஏ சத்துக்கள் நிரம்பிய உணவைக் கொடுக்கலாம்.

10. ஆரோக்கியமான 1000 நாட்கள்

குழந்தையின் மூளை செல்கள் 700-1000 வரையான நியூரல் இணைப்புகள் கொண்டது. இதனால் கற்றல், நடத்தை, ஆரோக்கியம் தொடர்பான அடிதளத்தை அமைத்துக்கொள்ளும் திறன் குழந்தையின் மூளைக்கு உண்டு.

இசையைக் கேட்கும் குழந்தைகளுக்கு, அதன் லயங்களைக் கற்றுக்கொள்வது கணிதத்தைக் கற்றுக்கொள்வதோடு இணைந்ததாக இருக்கிறது. குழந்தையிடம் பேசுவது, வாசித்துக் காட்டுவது, கதைகள் சொல்வது மூளையின் இணைப்புகளைக் கூடுதலாக்குகின்றன. குழந்தையின் தொடக்க ஆண்டுகளில் கிடைக்கும் அனுபவங்கள், பள்ளிச் செயல்பாட்டிலும் பிற்கால வாழ்க்கையில் சிறப்பாகச் செயல்படவும் உதவுகின்றன.

Leave a Reply