ஒரே நாளில் 20 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை. ஈரான் அரசு அதிரடி
ஈரான் நாட்டில் கடந்த சில வருடங்களாக ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் தீவிரவாதிகளுக்கு எதிராக ஈரான் அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 20 தீவிரவாதிகளை தூக்கிலிடு மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது. தூக்கு தண்டனையை உலகம் முழுவதும் ஒழிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வரும் சர்வதேச அமைப்புகளுக்கு இந்த செய்தி ஒரு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
இதுகுறித்து ஈரான் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல் ஒன்றில் கூறியிருப்பதாவது: “மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் கொலை செய்தவர்கள்… பெண்கள் மற்றும் குழந்தைகளை கொலை செய்தவர்கள், அழிவிற்கு காரணமானவர்கள். நாட்டின் பாதுகாப்பிற்கு எதிராக செயல்பட்டவர்கள், குர்திஷ் பிராந்தியத்தில் மதத் தலைவர்களை கொலை செய்தவர்கள்,” என்று அரசு தலைமை வழக்கறிஞர் முகமது ஜாவித் மாண்டஷேரி கூறியதாக ஐ.ஆர்.ஐ.பி. செய்தி வெளியிட்டு உள்ளது.
இதுபற்றி ஈரான் புலனாய்வுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், 2009-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த குண்டுவெடிப்புகள், கொள்ளைச் சம்பவங்கள் உள்ளிட்ட 24 ஆயுத தாக்குதல்களை பட்டியலிட்டுள்ளது.
மேலும், இந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும், மற்றவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.