ஜிஎஸ்டி அமல்படுத்த சாஃப்ட்வேர் தயார்: இன்போசிஸ் உருவாக்கியுள்ளது
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) முறையைச் செயல்படுத் துவதற்குத் தேவையான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு வசதி மற்றும் அதற்குரிய சாஃப்ட்வேர் தயாராக உள்ளது. இதை முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் உருவாக்கியுள்ளது.
இந்த வரி விதிப்பு சாஃப்ட்வேர் சோதனை ரீதியில் அக்டோபர் மாதம் முதல் செயல்படுத்திப் பார்க்கப்படும். ஜிஎஸ்டி-க்கென தனி இணையதளம் பிப்ரவரியில் உருவாக்கப்படும் என்று ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஒருங்கிணைப்பு அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. லாப நோக்கற்ற நிறுவனமாக மத்திய அரசு இதை செயல்படுத்துகிறது.
இந்த வரி விதிப்பு முறை எவ்விதம் செயல்படும் என்பதை தேர்ந்தெடுக்கப்பட்ட வரித்துறை நிபுணர்கள் சோதித்தறிய வழி ஏற்படுத்தப்படும் என்று குமார் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி சாஃப்ட்வேர் உருவாக் கத் திட்டத்துக்கான மொத்த மதிப்பு ரூ. 1,380 கோடியாகும். இந்த சாஃப்ட்வேரில் 65 லட்சம் முதல் 70 லட்சம் பேர் வரி தாக்கல் செய்யும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதை இன்போசிஸ் நிறுவன தொழில்நுட்பப் பிரிவு வடிவமைத்து உருவாக்கியுள்ளது.
பயன்படுத்துவதற்கு எளிதாகவும், காகித பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் காகிதம் இல்லாத மின்னணு தாக்கல் முறையாக இது அமையும் என்று பிரகாஷ் குமார் குறிப்பிட்டார்.
தனியார் நிறுவனங்களான எஸ்ஏபி மற்றும் டாலி சொல்யூஷன்ஸ், கிளியர் டாக்ஸ் ஆகியவற்றுடன் ஜிஎஸ்டிஎன் அமைப்பு பேச்சு நடத்தி வருவதாகவும், அவர்களது இணையதளம் மூலம் வரி தாக்கல் செய்யும் வசதியை உருவாக்கித் தருவதற்காக பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே வாட், உற்பத்திவரி, சேவை வரி செலுத்துவோர் புதிய முறைக்கு மாறுவதற்கான வழிகாட்டுதலை புதிய சாஃப்ட்வேர் அளிக்கும். அத்துடன் வரி செலுத்துவோரின் அனைத்து தகவலையும் புதிதாக பதிவு செய்து கொள்ளும்.
ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்காக 15 இலக்க எண் அளிக்கப்படும். மொத்தம் 58 லட்சம் தொழில் நிறுவனங்கள் இருப்பதாக வரித்துறை மூலம் ஜிஎஸ்டிஎன் கண்டறிந்துள்ளது.
ஜிஎஸ்டி இணையதளத்தில் வரி செலுத்துவோர் பதிவுசெய்வது, வரி தாக்கல் செய்வது, உள்ளிட்ட விவரங்களுக்கான வசதி இருக்கும். அத்துடன் வரி செலுத்துவோருக்கு உதவுவதற்கான ஹெல்ப் டெஸ்க் வசதியும் இருக்கும்.
வரித்துறை அதிகாரிகளுக்கென சில பிரத்யேக வசதிகள் இருக்கும். இதன்மூலம் தாக்கல் செய்த வரி சரிதானா, வர்த்தகம் அந்த அளவுக்குத்தான் உள்ளதா என்பதைப் பார்க்க முடியும்