எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு கூடுதல் பாதுகாப்பு. டெல்லி ஐகோர்ட் உத்தரவு
ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ள டெல்லி ஐகோர்ட் அவருக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து பதில் அளிக்குமாறு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா, தனக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து டெல்லி ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: “சென்னையில் அதிமுக தலைவரால் அறையப்பட்டது பற்றி ராஜ்யசபாவில் கடந்த 1ஆம் தேதி முறையிட்டேன். அச்சம்பவம் தொடர்பாக உடனடியாக நான் வசித்து வரும் நார்த் அவென்யூ பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. அதன்பேரில் ஒரேயொரு காவலர் மட்டும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளார். ராஜ்யசபாவில் முறையிட்ட அதே நாளில் திருநெல்வேலி மாவட்டம், உவரி கிராமத்தில் உள்ள எனது இல்லத்திலும் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் எனது கணவர், மகன் ஆகியோர் மீது போலியாக சில வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவற்றில் இருவரையும் கைது செய்யாமல் இருக்க, முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் நீடிப்பதால், சுதந்திரமாக நாடாளுமன்ற கடமைகளை ஆற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், எனக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால், எனது பாதுகாப்பு அதிகரிக்கப்படவில்லை. எனவே, கூடுதல் பாதுகாப்பு வழங்க டெல்லி காவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு, டெல்லி ஐகோர்ட் நீதிபதி ஏ.கே.பாதக் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா நாடாளுமன்றம் செல்ல கூடுதல் பாதுகாப்பு வழக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, எம்.பிக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினார். மேலும் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், டெல்லி அரசு, காவல்துறை ஆணையர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை நவம்பர் 12 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்