திமுகவில் இணைய சசிகலா புஷ்பா திட்டமா?
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளாரா? என்ற கேள்விக்கு திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தனக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு பெரும் ஆதரவு அளித்து வருவதாகவும், திமுகவில் இணையும் திட்டம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
அதிமுக தலைமை மீது, அதிமுக எம்பிக்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை ராஜ்யசபாவில் சமீபத்தில் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சசிகலா புஷ்பா சமீபத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, தனது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தமக்கு கனிமொழி உள்ளிட்ட திமுக எம்.பிக்கள் முழு ஆதரவு தெரிவித்ததாகவும், அதுமட்டுமின்றி காங்கிரஸ் தரப்பில் இருந்து இவ்வளவு பெரிய ஆதரவு தனக்கு கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் இருப்பினும் இந்த ஆதரவு அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும் தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்றும் அவர் கூறினார்.
அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் ராஜ்யசபா எம்.பியாக உள்ள சசிகலாபுஷ்பா வேறு கட்சிக்கு மாறினால் அவருடைய பதவி பறிபோகும் என்பது குறிப்பிடத்தக்கது.