உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பா? போட்டியிட ஆள் இல்லாததால் விரக்தியில் விரக்தியில் விஜயகாந்த்
கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக எடுத்த ஒரே ஒரு தவறான முடிவால் கிட்டத்தட்ட தேமுதிக கூடாரமே காலியாகிவிட்டது. அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துவிட்ட நிலையில் விரைவில் வரவுள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் கூட கிடைக்காத பரிதாபமான நிலை தேமுதிகவுக்கு ஏற்பட்டுள்ளது.
தேமுதிக கட்சியின் மாநில பொருளாளர் இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி ஆகிய இருவரும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை உற்சாகப்படுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. தேமுதிகவை நம்பி மீண்டும் ஒருமுறை தேர்தலில் போட்டியிட்டு இருக்கிற வேட்டியையும் இழக்க நாங்கள் விரும்பவில்லை என்றும் ஏற்கெனவே மனைவி தாலியை விற்று தேர்தல் வேலை பார்த்தது போதும்’ என்றும் வெளிப்படையாகவே தொண்டர்கள் கூறி வருகின்றனர்.
விஜயகாந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவகத்திற்கே தற்போது வருவதில்லை என்றும் தொண்டர்களின் மனநிலையை அறிந்து அவர் மன வருத்தத்தில் உள்ளதாகவும் இதனால் உள்ளாட்சி தேர்தலை தேமுதிக புறக்கணிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தேமுதிக தொண்டர் ஒருவர் கூறியதாவது: ‘கோயம்பேடு கட்சி அலுவலகத்திற்கு கேப்டன் வந்து 15 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டன. கடந்த மாதத்தில் ஒருநாள் மட்டுமே வந்தார். ஒருமணி நேரம் இருந்துவிட்டுக் கிளம்பிவிட்டார். இளங்கோவனும் பார்த்தசாரதியும் இருந்தால் அவர்களிடம் அரசியல் குறித்துப் பேசுவார். தொண்டர்களை அழைத்து நாட்டு நடப்புகளை விசாரிப்பார். இருவரும் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் கட்சி அலுவலகத்திற்கே கேப்டன் வருவதில்லை. பண்ருட்டியாரும் சந்திரகுமாரும் இருக்கும்போது அரசியல் நிகழ்வுகள் குறித்து விரிவான அறிக்கைகளை எழுதித் தந்தனர். இப்போது அவருடைய வீட்டில் இருந்தே அறிக்கை தயாராகிறது. ‘ உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பழைய செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டும்’ என்பதில் கேப்டன் உறுதியாக இருக்கிறார். அதற்கேற்ப, தீவிர பிரசாரத்தில் பங்கேற்கும் வகையில் உடல் நலனில் கவனம் செலுத்தி வருகிறார். அதற்கு முன்னோட்டமாக, தொண்டர்களைச் சமாதானப்படுத்தும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்கள் பார்த்தசாரதியும் இளங்கோவனும். விரைவில் கேப்டன் வெளியில் வருவார்” என்று கூறினார்.