காலநிலைக்கு ஏற்ற கட்டுமானப் பொருட்கள்

காலநிலைக்கு ஏற்ற கட்டுமானப் பொருட்கள்

9வீட்டைக் குளுமையாக வைப்பதுடன் கட்டுமானச் செலவையும் குறைக்கும் சில பொருட்களை இப்போது சந்தையில் பிரபலப்படுத்த வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது.

சந்தையில் பெரும்பாலும் நவீன கட்டுமானப் பொருட்களின் மீதே கவனம் செலுத்தப்படுத்துகிறது. அதனால், நம்முடைய பழைய, காலத்தால் அழியாத தொழில்நுட்ப உத்திகளைக் கட்டுமானத் துறையில் பயன்படுத்தத் தவறிவிடுகிறோம். அவற்றை மீண்டும் உள்ளூர்ச் சூழலில் பயன்படுத்துவதன் மூலம், இரும்பு, கான்கிரீட் ஆகியவற்றின் பயன்பாட்டின் அளவைக் குறைக்க முடியும். இதன் மூலம் கட்டுமானச் செலவையும் குறைக்க முடியும். அத்துடன் கட்டிடத்தையும் வலிமையானதாக அமைக்க முடியும். பாரம்பரியமான கட்டுமானப் பொருட்கள் உள்ளூர்த் தட்பவெப்ப நிலைக்கும் ஏற்றதாக இருக்கும். “சென்னைக்குக் குறைவாக வெப்பத்தை உள்வாங்கும் பொருட்களும், அதிகமான நிழலையும் கூரைகளையும் கொண்ட கட்டமைப்பு வடிவமைப்புகள் தேவைப்படுகின்றன” என்று சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் சேவியர் பெனிடிக்ட்.

நகரத்தின் காலநிலைக்கும், பட்ஜெட்டுக்கும் ஏற்ற கட்டுமானப் பொருட்கள்:

உள்ளீடற்ற சிமெண்ட் தொகுதிகள்

(Hollow cement blocks)

இவை பல்வேறு பரிமாண வடிவங்களில் கிடைக்கின்றன. இந்த சிமெண்ட் தொகுதிகளைச் சுவர்களை எழுப்புவதற்குப் பயன்படுத்தலாம். ஒரு கன மீட்டர் உள்ளீடற்ற சிமெண்ட் தொகுதிகளைப் பயன்படுத்த வெறும் 22 கிலோ சிமெண்ட்தான் தேவைப்படும். இந்த சிமெண்ட் தொகுதிகள் மழைக்காலத்தில் நீர்க்கசிவைத் தடுக்கும். அதேமாதிரி, கோடைக்காலத்தில் வெப்பத்தைக் குறைக்க உதவும்.

மறுசுழற்சி கூரைத்தகடுகள்

வளையும் மூங்கில் கூரைத்தகடுகள் (Corrugated bamboo roofing sheets), பாலி அலுமினியம் கூரைத் தகடுகள் (Aluminium Roofing Sheets) போன்றவற்றை மறுசுழற்சி மூலம் பயன்படுத்தலாம். இந்தத் தகடுகளை உலோகம், பிளாஸ்டிக், ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். இந்தத் தகடுகள் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டவை. அத்துடன் சுற்றுச்சூழலுக்கும் ஏற்றவை. மோசமான வானிலையைச் சமாளிக்கும் தன்மையுடன் தயாரிக்கப்படுகின்றன. இயற்கையான, நிலைத்தன்மைகொண்ட பொருட்களால் தயாரிக்கப்படுவதால் இவற்றை நிலையான, தற்காலிகமான கட்டமைப்புகளுக்குப் பயன்படுத்தலாம்.

களிமண் உள்ளீடற்ற செங்கற்கள்

(Clay hollow bricks)

இது களிமண்ணால் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது. தண்ணீர் தொட்டிகளில் தூர்வாரப்படும் மணல், நிலக்கரி சாம்பல், உமி, கிரானைட் சேறு போன்றவற்றை இணைத்து இந்தச் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. மற்ற பாரம்பரிய செங்கற்களைப் போல அல்லாமல் இவை கோடைக்காலத்தில் வீட்டைக் குளிர்ச்சியாகவும் குளிர்காலத்தில் வெப்பத்துடனும் வைத்திருக்கின்றன. அத்துடன் இந்தச் செங்கற்கள் வீட்டில் ஆற்றலைச் சேமிக்கவும் உதவுகின்றன. இந்தச் செங்கற்களுக்கு பூச்சுவேலை செய்ய வேண்டிய தேவையில்லாததால் கட்டுமானச் செலவையும் பெரிய அளவில் குறைக்கின்றன. இந்தச் செங்கற்களால் எழுப்பியிருக்கும் சுவரை சுண்ணாம்பு அடிப்பதற்குப் பதிலாக ஒரே ஒருமுறை வார்னிஷ் அடித்தால் போதுமானது. இது சுவர்களுக்கு இயற்கையான அழகைக் கொடுக்கும்.

‘கூல்’ பூச்சு தொழில்நுட்பம்

(Cool coating/ painting)

இந்த ‘கூல்’ பூச்சைக் கூரைகளுக்கு அடிப்பதால் அதிகமான வெப்பம் கூரைக்குள் இறங்குவதைத் தடுக்க முடியும். இந்த‘கூல்’ பூச்சு புற ஊதா, அகச்சிவப்பு கதிர்களைப் பெரிய அளவில் பிரதிபலிக்கும்படி தயாரிக்கப்படுகின்றது. புற ஊதா, அகச்சிவப்பு கதிர்களைத் தொடர்ச்சியாக அது நிராகரிப்பதால் கூரையின் கீழேயிருக்கும் காற்று சூடாகாமல் தடுக்கப்படுகிறது. அதனால், அறையை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க இந்தப் பூச்சு உதவுகிறது. இந்த ‘கூல்’ பூச்சு கட்டிடத்தின் ஆயுளை அதிகரிப்பதுடன், குளிர் சாதனங்களுக்கான மின்சாரச் செலவை நாற்பது சதவீதம்வரை குறைக்கிறது.

கரும்புச் சக்கை பலகைகள்

(Bagasse boards)

கரும்புச்சக்கைகளை இயற்கையான எரி பொருளாகவும், கட்டுமானப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது. இவற்றைச் செங்கல் தயாரிக்கவும், மரத்துடன் இணைத்து பலகைகள் செய்யவும் பயன்படுத்தலாம். கரும்புச் சக்கைகளால் தயாரிக்கப்படும் பலகைகள் லேசானதாகவும், நீடித்து உழைக்கக்கூடியதாகவும், பராமரிக்க எளிதாகவும், செலவு குறைவானதாகவும், ஈரப்பதத்தைத் தாங்கும்தன்மையுடனும் இருக்கின்றன. இந்தப் பலகைகளைத் தரைதளத்துக்கும் பயன்படுத்தலாம்.

பிளாஸ்டிக் கற்கள்

ஆப்பிரிக்காவில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட இந்தப் பொருள் கழிவகற்றும் பிரச்சினைக்குத் தீர்வாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கற்கள்

விலை குறைவாக இருப்பதுடன் பயன்படுத்தவும் எளிமையாக இருக்கின்றன. பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள் போன்றவற்றை உருக்கி இந்தக் கற்கள் தயாரிக்கப்படுகின்றன. நெடுஞ்சாலைகள், ரயில்வே உள்கட்மைப்புப் பணிகள் போன்றவற்றுக்கு இந்தக் கற்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. பாரம்பரியமான களிமண் செங்கற்களுக்கு மாற்றாக பிளாஸ்டிக் கற்களைப் பயன்படுத்தலாம்.

Leave a Reply