புதுவை கவர்னருடன் லதா ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு.
சமீபத்தில் புதுவை மாநிலத்தின் புதிய கவர்னராக பொறுப்பேற்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி, புதுவையை புதிய பூமியாக மாற்ற பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முக்கியமாக புதுவை மாநிலத்தை தூய்மையாக்க அவர் எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுதல்களை பெற்றுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் தனது டுவிட்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் புதுவை மாநில வளர்ச்சிக்கு நல்லெண்ணத் தூதராக நியமிக்க கிரண்பேடி விருப்பம் தெரிவித்திருந்தார். மேலும் புதுவையில் கழிவறை இல்லாத வீடுகளில் கழிவறை கட்டுயவர்களுக்கு ‘கபாலி’ படத்தின் டிக்கெட்டுக்களையும் அவர் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், கிரண்பேடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் புதுவையின் நல்லெண்ண தூதுவராக ரஜினி நியமனம் செய்யப்படுவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.