இளையதளபதி விஜய்க்கு இவ்வளவு சக்தியா? ஆச்சரியப்பட்ட துணை கலெக்டர்
காற்று நுழைய முடியாத இடத்திலும் காதல் நுழைந்துவிடும், ஊசி நுழைய முடியாத இடத்திலும் பத்திரிகையாளர்கள் நுழைந்துவிடுவார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. அதேபோல் மிகவும் பின் தங்கிய, எந்தவித நவீன வசதிகளும் நுழைய முடியாத ஒரு கிராமத்தில் ‘விஜய்’ என்ற இளையதளபதியின் பெயர் மட்டும் நுழைந்துள்ளது. இதுகுறித்த ஒரு ஆச்சரியமான தகவல் இதோ..
தமிழ்நாட்டை சேர்ந்த உமேஷ் கேசவன் என்ற ஐஏஎஸ் அதிகாரி கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியில் உதவி கலெக்டராக பணிபுரிந்து வருகிறார். அவர் சமீபத்தில் பாலக்காடு அருகேயுள்ள அட்டப்பட்டி என்ற கிராமத்திற்கு சென்றபோது அந்த கிராமத்தில், தெருவிளக்கு, கழிப்பறை, சாலை வசதி ஆகிய அடிப்படை வசதிகள் இல்லாமல் அங்கு மக்கள் வாழ்வதை பார்த்தார். அந்த கிராமத்து மக்களிடம் கல்வி, அரசியல், பொருளாதாரம் போன்ற எந்த விழிப்புணர்வும் இல்லை, ஆனால் அங்குள்ள இளைஞர்கள் பெரும்பாலானோர் விஜய் ரசிகர்களாக இருப்பதை கண்டு அவர் ஆச்சரியம் அடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக்கில் செய்த பதிவு இதோ: “நேற்று அட்டப்பாடி என்ற கிராமத்திற்கு சென்றேன். மிகவும் பின்தங்கிய பகுதியாக இருந்த அந்த கிராமத்தில் இந்த நூற்றாண்டிலும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வாழும் மக்களை சந்திக்க நேர்ந்தது. அங்குள்ள ஒரு இளைஞரிடம் கழிப்பறை எங்கே என்று நான் கேட்டபோது ஒரு பெரிய வெட்டவெளியை காண்பித்து இதுதான் எங்கள் அனைவருக்கும் கழிப்பறை என்று கூறினார். வெளியுலகம் தெரியாமல், கல்வி அறிவு இல்லாமல் அங்குள்ள இளைஞர்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். விவசாயம் இல்லாத நாட்களில் தமிழ் சேனல்களில் விஜய் படங்களையும், விஜய்யின் பாடல்களையும் கேட்பதுதான் தங்கள் பொழுதுபோக்கு என்று அவர்கள் கூறினார்கள். கிராமங்களின் முன்னேற்றத்திற்காக செலவு செய்யப்படும் கோடிக்கணக்கான ரூபாய் இந்த கிராமத்தை சென்றடையவில்லை. ஆனால் விஜய் மட்டும் சென்றுள்ளார்’ என்பதை காணும்போது ஆச்சரியமாக இருந்தது’ என்று கூறியுள்ளார்.
மேலும் அந்த கிராமத்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அவர் விஜய்யின் அலுவலகத்தை தொடர்பு கொண்டதாகவும், விஜய் நேரடியாக அந்த கிராமத்திற்கு சென்று அவர்களிடம் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அந்த பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். உமேஷ் கேசவன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அந்த கிராமத்திற்கு விஜய் விரைவில் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.