தீர்த்த திருவிழாவும் தீபப் பெருவிழாவும்!
வேதங்களே மலை வடிவம் கொண்டதால் வேதகிரி. வாழை மரம் நிறைந்த பகுதியானதால் கதலி வனம். நான்கு யுகங்களிலும் கழுகுகள் பூஜை செய்வதால் கழுக்குன்றம். கல்வெட்டுத் தகவல்களின்படி உலகளந்த சோழபுரம், இந்திரபுரி, நாராயணபுரி, பிரம்மபுரி, முனிக்கணபுரி, தினகரபுரி, ருத்திரகோடி என்று இன்னும் பல திருப்பெயர்களுடன் திகழும் திருத்தலம் திருக்கழுக்குன்றம்.
திருக்கயிலையிலிருந்து மூன்று சிகரங்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு, நந்திதேவரால் தென் திசைக்குக் கொண்டுவரப்பட்டனவாம். திருப்பருப்பதம், திருக்காளஹஸ்தி மற்றும் திருக்கழுக்குன்றத்தில் முறையே அவை மூன்றும் சேர்க்கப்பட்டன. எனவே, இது தென் கயிலாயம் ஆகும். இங்கு தர்மம் செய்தால், அது கோடி மடங்கு பலன் தரும். எனவே, இது தர்மகோடித்தலம் ஆகும் என்றும் போற்றுகிறார்கள்.
திரேதா யுகத்தில் சம்பாதி, ஜடாயு ஆகிய பறவைகளும், துவாபர யுகத்தில் சம்புகுத்தன் மற்றும் மாகுத்தன் ஆகிய அடியவர்களும், கலி யுகத்தில் பூடா, விருத்தா எனும் முனிவர்களும் வழிபட்ட தலம் இது. இறைவன் அருள்மிகு வேதகிரீஸ்வரர் என்று திருநாமம் கொண்டு, அம்மை திரிபுரசுந்தரியுடன் அருள்பாலிக்கும் இந்தத் தலம், செங்கல்பட்டு – மாமல்லபுரம் சாலையில், செங்கல்பட்டில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்தின் சிறப்புக்குச் சிறப்பு சேர்ப்பன, சங்குதீர்த்தமும், 12 ஆண்டுகளுக்கு அதில் நடைபெறும் புஷ்கரமேளா பெருவிழாவும் ஆகும்.
இந்த சங்கு தீர்த்தத்தில் நீராடி, மலையை வலம் வந்தால், தீராத நோயெல்லாம் தீரும். மலையடிவாரக் கோயிலின் எதிரில் அமைந்திருக்கும் தெருவின் கோடியில் இருக்கும் குளமே, சங்கு தீர்த்தம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தத் தீர்த்தத்தில் சங்கு (குறிப்பாக, வலம்புரிச் சங்கு) தோன்றுவதால் இந்தப் பெயர். பெரிய குளமாக விளங்கும் சங்கு தீர்த்தத்தைச் சுற்றிலும் படிகள் உள்ளன. நடுவில் நீராழி மண்டபமும் நீராடுவதற்கு வசதியாகப் படித்துறை மண்டபமும் உள்ளன.
மார்க்கண்டேயன் தவம் இயற்றி, சிவபெரு மானை வழிபட்டான். வழிபாடு செய்ய தீர்த் தத்தை எடுக்கப் பாத்திரம் இல்லை. என்ன செய்வதென்று அறியாமல் இறைவனை இறைஞ்ச, அவனுக்காக சங்கு தோன்றும்படி செய்தாராம் இறைவன். எனவே, சங்கில் நீரெடுத்து அவன் வழிபட்டான். இப்படி, சங்கு பிறந்த பொய்கையே, சங்கு தீர்த்தமாயிற்று. மார்க்கண்டேயனுக்காக சங்கு தோன்றிய இடமல்லவா! இங்கு நீராடினால் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் கூடும்.
திருக்கழுக்குன்றத்தின் சங்குதீர்த்த புஷ்கர மேளாவும் லட்சதீபப் பெருவிழாவும் பிரசித்த மானவை. குரு பகவான், பன்னிரண்டு ஆண்டு களுக்கு ஒருமுறை கன்னி ராசிக்குள் பிரவேசிக்கும் நேரத்தில், கங்கை முதல் அனைத்து நதிகளும் புண்ணிய தீர்த்தங்களும் சங்கு தீர்த்தத்தில் வந்து தாங்களே புனித நீராடுகின்றன. இதுவே சங்கு தீர்த்த புஷ்கரமேளா என்று கொண்டாடப் படுகிறது. அன்று, சங்கு தீர்த்தத்தில் நீராட லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள். மாலையில் லட்சதீபப் பெருவிழா நடைபெறும். கோயிலிலும், சங்குதீர்த்தத்திலும், ஊரெங்கும் தீபம் ஏற்றிக்கொண்டாடுவது வழக்கம்.
இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி திருக்கழுக்குன்றத்தில் சங்கு தீர்த்த புஷ்கரமேளா கொண்டாடப்பட உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள இருக்கும் சங்கு தீர்த்த புஷ்கரமேளாவில் கலந்துகொண்டு சங்கு தீர்த்தத்தில் புனித நீராடி வாழ்வில் சங்கடம் நீங்கி சந்தோஷம் காணலாம்.