தாய்ப்பால்… உயிர்ப்பால்… குழந்தைக்கு மட்டுமல்ல!
விழிப்பு உணர்வு
தாய்ப்பால்… ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் உணவு. இணையற்ற சிறப்பு உணவு. தாய்ப்பாலின் சிறப்புகளை தாய்மார்கள் அறியச்செய்யும் விதமாகவும், அவர்களை குழந்தைகளுக்கு அதிக நாட்கள் தாய்ப்பால் கொடுக்க வலியுறுத்தும் விதமாகவும், ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் வாரத்தை ‘தாய்ப்பால் வாரம்’ ஆகக் கொண்டாடுகிறது யுனிசெஃப் மற்றும் உலக சுகாதார நிறுவனம். அதற்கு வலுசேர்க்கும் விதமாக, தாய்ப்பாலின் மகத்துவங்களை முழுமையாக இங்கு விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் மனு லட்சுமி.
சீம்பால்… அருமருந்து!
குழந்தை கருவில் இருக்கும் காலத்திலேயே, தாய்க்கு பால் சுரப்பு தொடங்கிவிடும். ‘கொலஸ்ட்ரம்’ என்னும் சத்து, குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் முதல் பாலில் மிக அதிகளவு இருக்கும். குழந்தைக்குத் தேவையான முதல் சத்து இதுதான். பிரசவத்துக்குப் பின்னர் மூன்று நாட்கள் வரையில் சுரக்கும் இந்தப் பால் அடர்த்தியான மஞ்சள் நிற திரவமாக இருக்கும். இதைத்தான் ‘சீம்பால்’ என்பார்கள். இந்தப் பால் குழந்தைக்குக் கட்டாயமாகப் புகட்டப்பட வேண்டும். குழந்தைக்குத் தேவையான அத்தனை சத்துக்களும், நோய் எதிர்ப்புச் சக்தியும், ஆற்றலும் தரவல்லது இந்த சீம்பால். சுகப்பிரசவம் எனில் குழந்தை பிறந்த அரை மணி நேரத்துக்குள்ளும், சிசேரியன் பிரசவம் எனில் இரண்டு மணி நேரத்தில் இருந்தும் இந்த சீம்பால் குழந்தைக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்.
பால் சுரப்பு.. எல்லா அம்மாக்களுக்கும் இருக்கும்!
சில பெண்கள், தங்களுக்குப் பால் சுரப்பு இல்லை என்று கவலைப்படுவார்கள். சின்ன மார்பகங்கள், ஒல்லி உடல்வாகு போன்றவற்றுக்கும் பால் சுரப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எல்லா அம்மாக்களுக்குமே அவள் குழந்தைக்குத் தேவையான பால் நிச்சயம் சுரக்கும். குழந்தையின் சிரிப்பு, அழுகை, ஸ்பரிசம் போன்றவற்றை அம்மா அனுபவித்து உள்வாங்கும்போது, அந்தத் தாய்மை உணர்வால் தூண்டப்படும் ஹார்மோன்கள்தான் பால் சுரப்பை அதிகரிக்கும்.
நீண்ட நாட்கள் கொடுக்க வேண்டும்!
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, 7 வயது வரையிலும் தாய்ப்பால் கொடுத்த அம்மாக்கள் இருந்தார்கள். பள்ளி செல்லும் குழந்தைகள் மதிய இடைவேளையில் அம்மாவிடம் வந்து பால்குடித்துவிட்டுச் செல்லும் காட்சிகள் சகஜமானவை. இன்றைய சூழ்நிலையில், குறைந்தபட்சம் 6 மாதங்களுக்காவது குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியம். இந்த காலகட்டத்தில் தண்ணீர்கூட கொடுக்கத் தேவையில்லை, தாய்ப்பால் மட்டுமே போதும். ஆறு மாதங்களுக்குப் பிறகு, குழந்தையின் உடல் வளர்ச்சிக்குத் தாய்ப்பால் மட்டுமே போதாது என்பதால், இணை உணவுகளைப் பழக்க ஆரம்பிக்க வேண்டும். எனினும், அவற்றுடன் தாய்ப்பாலும் தொடர்ந்து கொடுத்துவரும்போது குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். அதிகபட்சமாக, தாய்க்கு பால் சுரப்பு இருக்கும்வரை ஒரு வயது வரையிலோ, இரண்டு வயது வரையிலோகூட தாய்ப்பால் கொடுக்கலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள், தாய்ப்பாலை சேகரித்துவைத்து குழந்தைக்குப் பால்புகட்டக் கைகொடுக்கும் புட்டிகள் இப்போது வந்துவிட்டன. மருத்துவரின் வழிகாட்டுதலோடு அதைப் பயன்படுத்தலாம். என்றாலும், பால் புகட்டும்போது அரவணைப்பு, கதகதப்பு, ஸ்பரிசம் என தாயிடம் கிடைக்கக்கூடிய பாதுகாப்பு உணர்வு குழந்தைக்கு மிகத் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்ப்பால்… இணையற்ற உணவு!
புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், `விட்டமின் கே மற்றும் ஏ’ சத்துக்கள் நிறைந்தது தாய்ப்பால். கருவில் தாயிடமிருந்து சத்துக்கள் பெறும் குழந்தை, பிறந்ததும் நேரடியாக உணவை எடுத்துக்கொள்ளும்போது, அந்த முதல் உணவு அதற்கு மிகவும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். பசும்பால், பால் பவுடர்களில் 100% பாதுகாப்பும், சத்தும் கிடைக்காது. பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே எளிதாக, இயற்கையாகச் செரிமானம் ஆகும். மலம் சீராக வெளிப்பட்டு, குழந்தையின் உடல் இயக்கம் தடையின்றி இருக்கும். சத்துக்களும் முழுமையாகக் கிடைக்கும்.
குழந்தை தன் தாயின் கருவறை விடுத்து வெளிவரும்போது, புதிய சூழலுடன் அதற்கு முதலில் ஏற்படும் பிரச்னை, ஒவ்வாமை. சரும ஒவ்வாமை மற்றும் இதர ஒவ்வாமைகளால் பாதிக்கப்படும். ஆனால், தாய்ப்பால் கொடுக்கப் படும் குழந்தைக்கு அலர்ஜி உண்டாகாமல் தடுக்கப்படுகிறது. தாய்ப்பால் தரும் இணையற்ற நோய் எதிர்ப்புச் சக்தி… தொற்று, வயிற்றுப்போக்கு, நிமோனியா காய்ச்சல், நுரையீரல் பாதிப்புகளில் இருந்து குழந்தையைக் காக்க வல்லது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் மிகவும் துறுதுறுவென இருப்பர். அவர்களின் மூளை வளர்ச்சி, ஐக்யூ பவர், புட்டிப்பால் குடித்து வளரும் குழந்தைகளைவிட 3 மடங்கு அதிகமாக இருக்கும் என்பதை, தாய்மார்கள் தயவுசெய்து கவனிக்கவும்’’ என்று அறிவுறுத்தி முடித்தார் டாக்டர் மனு லட்சுமி.
ஆரோக்கியமும் அறிவுக்கூறும் குழந்தைக்குக் கிடைக்கச் செய்யும் உயிர்ப்பாலான தாய்ப்பால், ஒவ்வொரு குழந்தையின் உரிமை; ஒவ்வொரு தாயின் கடமை!