சாப்பாட்டு மேஜைகள் பல விதம்
டேபிள் என்னும் சொல் லத்தீன் மொழிச் சொல்லான டேபிளா என்னும் சொல்லிலிருந்து வருகிறது. அப்படியானால் இந்தப் பயன்பாடு லத்தீன் கலாச்சாரத்திலிருந்து வந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் டைனிங் டேபிள் எனப்படும் சாப்பாட்டு மேஜை கி.பி.5-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் பயன்பாட்டுக்கு வருகிறது. இங்கிலாந்தில்தான் அதிகமாகச் சாப்பாட்டு மேஜை பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இன்று சாப்பாட்டு மேஜை உலகம் முழுவதும் பரவலான பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தச் சாப்பாட்டு மேஜை தற்போது சமையலறைக்கு அருகில்தான் வைக்கப்படுகிறது. ஆனால் தொடக்கக் காலத்தில் சாப்பாட்டு மேஜை, பிரத்யேகமான இடத்தில்தான் வைக்கப்பட்டது. இந்த சாப்பாட்டு மேஜை உருவாக்க ஆரம்ப காலத்தில் மரங்களையே பயன்படுத்தி வந்தனர்.
பிறகு இரும்பு பயன்படுத்தப்பட்டது. இப்போது மார்பிள், டைல்கள், பிளாஸ்டிக், அக்ரலிக் எனப் பலவிதமான பொருள்களைக் கொண்டு சாப்பாட்டு மேஜை உருவாக்கப்படுகிறது. பயன்படுத்தப்படும் பொருள்களைப் பொறுத்து சாப்பாட்டு மேஜையைப் பிரிப்பதுபோல் அதன் வடிவத்தை வைத்தும் பிரிக்கலாம். அதாவது மரபான வடிவம், ஷேக்கர் வடிவம், நவீன வடிவம், இன்றைய காலகட்ட வடிவம், நாட்டுப்புற வடிவம், தொழிற்சாலை வடிவம் எனப் பிரிக்கலாம்.
# மரபான வடிவம்
இது ஐரோப்பியாவில் பயன்படுத்தப்பட்ட வடிவம். இந்த வடிவத்தில் உருவாக்கப்படும் சாப்பாட்டு மேஜை கலை நயம் மிக்கதாகவும் ஆடம்பரமாகவும் இருக்கும். நேர்த்தியான வடிவமைப்பும் விசாலமான பரப்பையும் கொண்டதாக இருக்கும். வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பல ஆங்கிலப் படங்களில் இந்த வடிவத்தை நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.
# ஷேக்கர் வடிவம்
ஷேக்கர் வடிவ மேஜைகள் ஒரு குறிப்பிட்ட மதக் குழுவால் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதனால்தான் இந்தப் பெயர் வந்தது. இந்த வகை மேஜை, எளிமையானதாகவும் தேவையைக் கருதியும் உருவாக்கப்படுபவை. அதனால் தேவைக்கு அதிகமான அலங்காரங்கள் இந்த வடிவத்தில் இருக்காது. மேலும் மேஜையின் வண்ணமும் மரத்தின் இயற்கையான வண்ணத்தில்தான் இருக்கும்.
# நவீன வடிவம்
இந்த வகை வடிவம் 20-ம் நூற்றாண்டுக்குப் பிறகு உருவாக்கப்பட்டது. தேவையையும் அழகையும் பிரதானமாகக் கொண்டு இந்த வடிவம் உருவாக்கப்பட்டது. கோடுபோட்டது போன்ற நேர்த்தியான வடிவத்திலும் கூரிய முனையும் கொண்டது இந்த வடிவம். மேலும் இந்த வகை மேஜைகள் மெல்லிய அடுக்கு கொண்டவையாக இருக்கும்.
# நாட்டுப்புற வடிவம்
நாட்டுப்புற வடிவம் மேஜைகள் விடுமுறை விடுதிகள், உணவு விடுதிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வண்ணம் தீட்டப்படாத மேஜையாக இருக்கும். அதுபோல கையால் இளக்கி உருவாக்கப்பட்டதாகவும் மரத்தில் கிளையில் இருந்து ஒரு கனியைப் பறித்து உண்பது அதிக சுவையாக இருக்கும் அல்லவா? அதுபோன்ற இயற்கையான உணர்வு நமக்குக் கிடைக்கும்.
# தொழிற்சாலை வடிவம்
தொழிற்சாலையில் பயன்படக்கூடிய இரும்புச் சட்டங்களைக் கொண்டு எளிமையான வடிவத்தில் உருவாக்கப்படுவை இந்த வகை மேஜை. இவை தொழிற்சாலைப் பணியாளர்களின் சாப்பாட்டு அறைக்காக உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இது பிற்பாடு ஓர் அழகியல் வடிவமாக உணவு விடுதிகள், விடுமுறை விடுதிகள் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.
# இன்றைய காலகட்ட வடிவம்
இது 20-ம் நூற்றாண்டுக்குப் பிறகு வந்த வடிவம். இது பல விதமான வடிவங்களில் புதுமையான முறையில் உருவாக்கப்படுவது. அதுபோல பயன்படும் பொருள்களும் வித்தியாசமானவை. மேஜை வடிவம் முழுவதும் ஒரே அச்சால் உருவாக்கிச் செய்யப்படும் முறையை இந்தப் புதுமைக்கு உதாரணமாகச் சொல்லலாம்