உலகின் மிகப்பெரிய விமானம் ‘ஏர்லேண்டர் 10’. சோதனை முயற்சி வெற்றி
’ஏர்லேண்டர் 10’ என்ற உலகின் மிகப்பெரிய விமானம் வெற்றிகரமாக தனது சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளதாகவும், விரைவில் பயணிகளுக்காக இந்த விமானம் தனது சேவையை தொடங்கும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.
302 அடி நீளம், 143 அடி அகலம், 85 அடி உயரத்துடன் கூடிய உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை வெள்ளோட்டம் இன்று பிரிட்டனில் வெற்றிகரமாக நடைபெற்றது. ஹெலிகாப்டரைப் போலவே ரன்வே இல்லாமல் தரையிலும் இறங்கும் ஆற்றல் கொண்ட இந்த விமானம் மணிக்கு 92 மைல் வேகத்தில் சுமார் 9 ஆயிரம் டன் சரக்குகளை சுமந்தபடி தொடர்ந்து 5 நாட்கள்வரை பறக்கும் தன்மை கொண்டது.
இந்த விமானத்தை முதலில் அமெரிக்காதான் வடிவமைக்க திட்டமிட்டது. ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக அமெரிக்கா இந்த முயற்சியை கைவிட்டது. பின்னர் பிரிட்டன் நாட்டை சேர்ந்த ’ஹைபிரிட் ஏர் வெஹிகில்ஸ்’ என்ற நிறுவனம் தற்போது இந்த விமானத்தை உருவாக்கி சாதனை செய்துள்ளது.
ஜெட் ரக பயணிகள் விமானத்தைவிட சுமார் 50 அடி அதிக நீளம் கொண்ட ’ஏர்லேண்டர் 10’ விமானம் நான்கு என்ஜின்களை கொண்டது. தரையில் இருந்து புறப்படுவதற்கு மட்டும் ஹீலியம் வாயு பயன்படுத்தப்பட்டாலும், இது புறப்பட்டு செல்லும் ஓசை, இதர விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் எழுப்பும் சப்தத்தைவிட மிகவும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.