4 வயதில் 9ஆம் வகுப்பில் சேரும் அபார ஞாபகசக்தி கொண்ட குழந்தை

4 வயதில் 9ஆம் வகுப்பில் சேரும் அபார ஞாபகசக்தி கொண்ட குழந்தை

babyஒருசில குழந்தைகள் இளம்பருவத்திலேயே அபார புத்திசாலிகளாக இருப்பார்கள். அவர்களுக்கு என தனியாக தேர்வு நடத்தி சிறுவயதிலேயே பெரிய படிப்பு படிக்க அனுமதி அளிப்பதும் அவ்வப்போது நடந்து வருகிறது.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 4 வயது அனன்யா சர்மா என்ற குழந்தைக்கு 9 வது படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. யூகேஜி படிக்கும் 4 வயதில், இந்த குழந்தை 9வது வகுப்பு படிக்கவிருப்பதால் அவருடைய பெற்றோர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே இவருடைய சகோதரியும் அபாரமான ஆற்றல் திறன் பெற்று 7வயதில் 10வது படிப்பை முடித்துள்ளார். ஆனால் அனன்யா, 5வது வயதிலேயே பத்தாவதை முடித்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மாவட்ட கல்வி ஆய்வாளர் உமேஷ் திரிபாதி செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘அனன்யா மிகவும் திறமையானவர். தற்போது இந்தி மொழியை அவள் திறமையாக பேசுகிறாள். மேலும் 9 வது வகுப்பு பாட புத்தகங்களையும் அவள் எளிதாக வாசிக்கிறாள். இதனால் நேரடியாக 9 வது படிக்கும் வாய்ப்பு அவளுக்குக் கிடைத்திருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

அனன்யாவின் தந்தை தேஜ் பகதூர் இதுகுறித்து கூறியபோது, ‘அனன்யா 1 வயது 9 மாதங்களிலேயே ராமாயணம் மற்றும் சுந்தர காண்டம் போன்ற புத்தகங்களை சரளமாக வாசிப்பாள். படி என நாங்கள் ஒருபோதும் அவளை வற்புறுத்தியதில்லை. இந்த மாதிரி அதிசய குழந்தைகள் இருப்பதால் நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்ட குடும்பமாக உணர்கிறோம்’ என தெரிவித்தார்.

தேஜ் பகதூர் குடும்பத்திற்கு இந்த சாதனை ஒன்றும் புதிதல்ல. அனன்யாவின் சகோதரன் சைலேந்திரா தனது 14 வயதில் பிசிஏ முடிக்க, சகோதரி சுஷ்மா 15 வயதில் பிஹெச்டி படிக்கும் வாய்ப்பைப் பெற்றார். சுஷ்மாவின் 7 வயதில் 10 வது படிப்பை முடித்ததற்காக இளைய மாணவர் என்ற பட்டத்துடன் சுஷ்மா ‘லிம்கா’ புத்தகத்தில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply