ரூ.30 ஆயிரம் கோடி நிதி மோசடியால் நளினி சிதம்பரத்திற்கு தொடர்பா? அமலாக்கத்துறை சம்மன்
மேற்குவங்க மாநிலத்தில் பல முக்கிய தலைகள் உருண்டதற்கு காரணமான சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் ஆஜராகுமாறு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரூ.30 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட சாரதா நிதி நிறுவனத்தின் தலைவர் கைது செய்யப்ப்பட்டு சிறையில் இருக்கின்றார். இந்நிலையில் மேற்குவங்கத்தின் பல அரசியல் தலைவர்கள் இந்த மோசடியில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பல அரசியல் தலைவர்கள் தன்னை மிரட்டி பண பெற்றதாக அதன் தலைவர் சுதிப்தா சென் சிபிஐ விசாரணையில் தெரிவித்துள்ளார். அவர் கூறிய தலைவர்களின் பட்டியலில் நளினி சிதம்பரத்தின் பெயரும் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே சிபிஐ தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையிலும் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது.
ரூ.42 கோடி செலவில் தொலைக்காட்சி சேனல் வாங்கும் விவகாரத்தில் சாரதா குழுமத்துக்கு சட்ட ஆலோசனை வழங்கியதற்காக நளினி சிதம்பரத்துக்கு ரூ.1.26 கோடி வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் நளினி சிதம்பரத்திற்கு சாரதா நிறுவனத்தின் பிற கருப்புப் பணப் பரிமாற்றங்களிலும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகிறது.
இது குறித்து ஏற்கெனவே அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் நளினி சிதம்பரத்திடம் விசாரணை நடத்திவிட்டன. இந்நிலையில் சில புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதை அடுத்து அவரை அடுத்த மாதத் தொடக்கத்தில் கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத் துறை விசாரணை அதிகாரி முன்பு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.