7 பேர்களை விடுவிக்க முதல்வர் முனைப்புடன் செயல்படுகிறார். அற்புதம்மாள்
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரும் விடுதலை செய்யப்படுவது எப்போது என கோடிக்கணக்கான தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும் நிலையில் தமிழக முதல்வரின் முழு முயற்சியால் அவர்கள் 7 பேர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகே நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் செய்தியாளுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ”ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் எனது மகன் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலைக்காக, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
இந்த வழக்குத் தொடர்பாக, தற்போது மூவர் அமர்வு குழுவின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம். இந்த குழுவின் முடிவு வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 7 பேரின் விடுதலை தொடர்பாக, மத்தியில் ஓர் இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நமது முதலமைச்சரின் முழு முயற்சியின் காரணமாக, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று கூறினார்.