வாக்குறுதிகளை அள்ளி வழங்க வேண்டாம். ஜெயலலிதா, கருணாநிதிக்கு தேர்தல் கமிஷன் கண்டனம்

வாக்குறுதிகளை அள்ளி வழங்க வேண்டாம். ஜெயலலிதா, கருணாநிதிக்கு தேர்தல் கமிஷன் கண்டனம்

Jayalalitha-Karunanidhi
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இலவசங்கள் வழங்குவது குறித்து ஏராளமான வாக்குறுதிகளை தங்களுடைய தேர்தல் அறிக்கையில் வெளியிட்டிருந்தன. ஆனால் அவைகளை நிறைவேற்ற நிதி ஆதாரங்கள் குறித்து சரியாக விளக்கவில்லை என்று இரு கட்சிகளுக்கும் தேர்தல் கமிஷன் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு தனித்தனே கடிதம் எழுதியுள்ளது.

ஜெயலலிதாவுக்கு தேர்தல் கமிஷன் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது தேர்தல் ஆணையம் வெளியிட்ட மாதிரி தேர்தல் நடத்தை விதிமுறைகளை உங்கள் கட்சி மீறியதற்காக விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டது.அந்த கடிதத்துக்கு அ.தி.முக. சார்பாக கடந்த மே 15–ந் தேதி அளித்த விளக்கத்தில் உங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகள் மற்றும் அவற்றை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது,

அந்த விளக்கம் தேர்தல் ஆணையம் வெளியிட்ட மாதிரி தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்ட வழிகாட்டுதல் ஆகியவற்றின் அடிப்படையில் ஆராயப்பட்டது.அவற்றில் கூட்டுறவு வங்கிகளின் விவசாயக் கடன்கள் தள்ளுபடி, ஆதி திராவிடர்களுக்கு இலவச வாஷிங் மெஷின்கள், பொங்கல் நேரத்தில் ரூ.500 இலவச கூப்பன்கள், குடும்ப அட்டை உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் இலவச மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதாக உங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றுக்கான சரியான நிதி ஆதாரங்கள் குறித்து உங்கள் கட்சி அளித்த பதில் திருப்தியானதாக இல்லை. எனவே, இதற்கு தேர்தல் ஆணையம் கண்டனத்தை தெரிவிக்கிறது.நீங்களும், உங்கள் கட்சியும் வருங்காலத்தில் தேர்தல் அறிக்கையில் அளிக்கும் வாக்குறுதிகள், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள மாதிரி தேர்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் அமையுமாறு கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தேர்தல் கமிஷன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–தேர்தல் அறிக்கை குறித்து நீங்கள் அளித்த விளக்கத்தில் வாக்குறுதிகள் மற்றும் அவற்றுக்கான நிதி ஆதாரங்கள் பற்றி நியாயப்படுத்தி விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தாலும், அவை தேர்தல் அறிக்கையிலும் தெளிவாக விளக்கப்பட்டு இருக்க வேண்டும். எனவே, உங்கள் கட்சி வருங்காலத்தில் தேர்தல் அறிக்கையில் அளிக்கும் வாக்குறுதிகள், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள மாதிரி தேர்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் அமையுமாறு கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply