நீட்’ குழப்பம் நீடிப்பு: புதுச்சேரி மாணவர்கள் தவிப்பு

நீட்’ குழப்பம் நீடிப்பு: புதுச்சேரி மாணவர்கள் தவிப்பு

students
புதுச்சேரியில், நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை தொடர்பான குழப்ப நிலை நீடிப்பதால், புதுச்சேரி மாணவ, மாணவியர், பெற்றோர் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 90-க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கிடையாது.
இந்த நடைமுறைகளை மாற்றும் வகையில் மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை நடத்த இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில் ஆகியவை முடிவு செய்தன.
இதனை எதிர்த்து பல்வேறு மாநில அரசுகள், தனியார் மருத்துவக்கல்லூரிகள் பதில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் 2016-17-ஆம் கல்வியாண்டிலேயே மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி நுழைவுத் தேர்வை (என்.இ.இ.டி.) நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி மத்திய கல்வி வாரியம் சிபிஎஸ்இ சார்பில் கடந்த மே 1-ஆம் தேதி முதல் கட்ட தேசிய நுழைவுத் தேர்வு (நீட்) நடைபெற்றது. அதில் பங்கேற்க முடியாதவர்களுக்கு ஜூலை 24 ஆம் தேதி தகுதித் தேர்வு நடைபெற்றது. நீட்தேர்வு முடிவுகள் கடந்த 17-ஆம் தேதி வெளியிடப்பட்டு விட்டன.
புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவ, பொறியியல் பாடப்பிரிவுகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சென்டாக் அமைப்பின் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. புதுவையில் உள்ள ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் 128 இடங்கள் மற்றும் 7 தனியார் மருத்துவக்கல்லூரியில் அரசுக்கான ஒதுக்கீடு 283 இடங்கள் என மொத்தம் 401 இடங்களுக்கான கலந்தாய்வு நடந்தது. பல் மருத்துவப் பாடப்பிரிவும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் முழுவதும் நிரம்பி விட்டன.
இதற்கிடையே புதுச்சேரியில் மொத்தம் உள்ள 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் போக 717 எம்பிபிஎஸ் இடங்களும், பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் போக 205 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. இவை நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் வருபவையாகும்.
நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டதின் நோக்கமே, தகுதியான மாணவர்கள் மருத்துவக்கல்வியில் சேரவும், தனியார் கல்லூரிகளில் கட்டண நன்கொடை முறையை ஒழிக்கவும்தான்.
ஆனால், புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ரூ.60 லட்சம் வரை எம்பிபிஎஸ் பாடப்பிரிவுகளுக்கு நன்கொடை பெறப்படுகிறது என புகார்கள் எழுந்துள்ளன. மேலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் நன்கொடை கட்டணம் செலுத்துவோருக்குத் தான் இடம் ஒதுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
நீட் தேர்வில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. மாணவர்-பெற்றோர் நலச்சங்கங்கள் சார்பில் திரட்டப்பட்ட தகவலின்படி தோராயமாக 200 பேர் தகுதி பெற்றிருக்கலாம் என மட்டுமே விவரம் கிடைத்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இப்பிரச்னை தொடர்பாக 4 முறை தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகிகள், பெற்றோர் தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெளிவான வழிகாட்டுதலை வெளியிடாததால், புதுச்சேரி அரசாலும் இப்பிரச்னையில் முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளது.
தனியார் கல்லூரிகளிடம் 10 சதவீத இடங்கள் புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் இல்லாத நிலையில் புதுச்சேரி மாணவ, மாணவியர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்,
புதுச்சேரி மாநில நீட் தேர்வு நடைமுறை ஒருங்கிணைப்பாளராக சுகாதாரத் துறை இயக்குநர் ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். நீட் தேர்வில் தகுதி பெற்ற புதுவை மாணவ, மாணவியரின் பட்டியலை தர வேண்டும் எனக்கோரி இயக்குநர் ராமன், சிபிஎஸ்இ அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி மாணவர் பெற்றோர் நலச்சங்கத் தலைவர் வை.பாலா கூறியது:புதுவை மாநிலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கை வெளிப்படையாக நடக்க வேண்டும். புதுவை மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து ஒற்றைச்சாளர முறையில் கலந்தாய்வை நடத்த வேண்டும். சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியது: நீட் தரவரிசைப் பட்டியலை முதலில் பெற வேண்டும். மத்திய சுகாதாரத் துறையிடம் நீட் தேர்வு தொடர்பான வழிகாட்டுதல்களை கேட்டுள்ளோம். அதன்பின் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply