ஐஐடி மாணவர்களிடம் ஜோக் அடித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்
இந்தியாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் செய்து வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி டெல்லியில் ஐஐடி மாணவர்கள் மத்தியில் பேசியபோது நகைச்சுவை ததும்ப பேசியது அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜான் கெர்ரி தனது பயணத்தின் ஒருபகுதியாக டெல்லி ஐஐடி மாணவர்கள் மத்தியில் நேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் அங்கு குழுமியிருந்த மாணவர்களிடம், நீங்கள் அனைவரும் காரில்தான் இங்கு வந்தீர்களா? இல்லை ஏதாவது மிதவை வாகனத்தில் இங்கு வந்தீர்களா? எனக் கேட்டபோது அரங்கம் முழுவதும் சிரிப்பொலி எழுந்தது. நேற்று பெய்த கனமழையால் டெல்லி ஐஐடி வரும் வழியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் நிரம்பியிருந்ததால் அவர் இவ்வாறு மாணவர்களிடம் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது..
முன்னதாக, விமான நிலையத்திலிருந்து அவரது விடுதி அறைக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்ட அவர் ஒரு மணி நேரம் நடுவழியில் காத்திருந்தார். இதனால் அவருடைய நிகழ்ச்சிகள் சில ஒத்தி வைக்கப்படாலும் திட்டமிட்டபடி டெல்லி ஐஐடியில் மாணவர்களை மட்டும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.