வாழு. வாழவிடு. காவிரி பிரச்சனையில் கர்நாடகாவிற்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை
கர்நாடக மாநிலத்திடமிருந்து சம்பா சாகுபடிக்காக காவிரி நீர் பெற்றுத் தரவேண்டும் என்ற கோரிக்கையோரு தமிழக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் இரு மாநில அரசுகளின் வாதங்களை கேட்ட பின்னர் ‘தமிழகத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் நீர் வழங்குங்கள். அவர்களை வாழவிடுங்கள்’ என்று அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து நீதிபதி தீபக் மிஸ்ரா மேலும் கூறியதாவது: ‘காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பை கர்நாடக அரசு ஏன் நடைமுறைப்படுத்தக்கூடாது. கடந்த மூன்று மாதங்களில் தமிழக விவசாயிகள் நீரின்றி தவித்து வருகிறார்கள். கர்நாடக அரசு அவர்களின் நிலையை உணர்ந்து யோசிக்க வேண்டும். 2007ஆம் ஆண்டு சொன்ன நடைமுறையை கர்நாடக அரசு பின்பற்றவே இல்லை. இருமாநில அரசு, மக்கள், விவசாயிகளின் பிரச்சினையை கவனத்தில் கொள்ள வேண்டும். இது அனைத்து மக்களின் வாழ்வாதாரம். வாழு வாழ விடு என்கிற வார்த்தையை கர்நாடக அரசு பின்பற்ற வேண்டும். மழை வருமா? வராதா? என்று சொல்ல முடியாத நிலையில், கர்நாடகம் மனிதாபிமான அடிப்படையில் தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
முன்னதாக தமிழகத்திற்கு கடந்த ஆண்டு கர்நாடக மாநிலம் வழங்கவேண்டிய 35 டி.எம்.சி தண்ணீரையும், இந்த ஆண்டு வழங்கி இருக்கவேண்டிய 27 டி.எம்.சி நீரையும் இதுவரை கர்நாடகா வழங்கவில்லை. மொத்தம் 62 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டிய நிலையில் தமிழகம் 50 டி.எம்.சி தண்ணீர் வழங்கினால் கூட போதும் என்று கூறியிருந்தது. ஆனால் அதையும் கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருகிறது.
தங்களுக்கு இந்த பருவத்தில் 180 டி.எம்.சி தண்ணீர் இருக்க வேண்டும் என்றும், ஆனால் 80 டி.எம்.சி மட்டுமே கையிருப்பாக இருக்கின்றது என்றும் இதில் 50 டிஎம்சி தண்ணீர் கொடுத்தால் கர்நாட மாநில விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள் என்பதால் தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக அரசு கூறி வருகிறது.