பெல்லட் குண்டுகளுக்கு பதில் மிளகாய்ப்பொடி குண்டுகள். ராஜ்நாத்சிங் அனுமதி
காஷ்மீர் கலவரத்தின்போது பயன்படுத்தப்பட்ட பெல்லட் குண்டுகளால் கண்பார்வை உள்பட பல பாதிப்புகள் ஏற்பட்டதாக ஏராளமான புகார்கள் வந்ததால், தற்போது பெல்லட் குண்டுகளுக்கு பதில் மிளகாய்ப்பொடி குண்டுகளை பயன்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அனுமதி அளித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்த பெல்லட் ரக தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டபோது ஏராளமானோரின் கண் பார்வை பறிபோனது. இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலர் டி.வி.எஸ்.என். பிரசாத் தலைமையில் 7 பேர் கொண்ட உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு, மத்திய அரசிடம் கடந்த மாதம் 29-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், மிளகாய்ப் பொடி குண்டுகளை பயன்படுத்தலாம் என்று அந்தக் குழு பரிந்துரை செய்திருந்தது. இதுதொடர்பான கோப்புகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ஒப்புதலை அளித்தார். இதையடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு ஆயிரம் மிளகாய் பொடி குண்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவை காஷ்மீரை இன்று சென்றடையும்
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.