யானைகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற விவசாயிகளுக்கு உதவும் தேனீக்கள்
தமிழக காடுகளில் சுமார் 3750 யானைகள் உள்ளதாக கணக்கெடுப்பு கூடுகின்றது. இவற்றில் ஒருசில யானைகள் பல்வேறு காரணங்களுக்காக ஊருக்குள் புகுந்துவிடுவதால் பயிர்கள் நாசம் உள்ளிட்ட பல சேதங்கள் உண்டாகிறது.
குறிப்பாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, கோவை மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள விவசாயிகளின் விளைநிலங்களுக்குள் யானைக்கூட்டம் புகுந்து விவசாயிகளின் பலமாத உழைப்பை ஒருசில மணி நேரங்களில் வீணாக்கிவிடுகிறது.
யானைகளிடம் இருந்து பயிர்களைக் காக்க விவசாயிகள் பறையடிப்பு, தீப்பந்தம், பட்டாசு வெடித்தல், மின் வேலி அமைத்தல், அகழிகள் தோண்டுதல் போன்ற பல்வேறு முறைகளை பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் யானைகளின் அட்டகாசம் ஓயவில்லை
இந்நிலையில் தேனீக்களை கொண்டு காடுகளில் இருந்து வெளியேறும் யானைகள் விவசாய நிலங்களில் புகுவதை தடுத்து பயிர்களைக் காப்பாற்றும் புதிய உத்தியை விவசாயிகள் கையாள உள்ளனர்.
இதுகுறித்து சூழல் கல்வியாளர் எஸ்.எஸ்.டேவிட்சன் கூறியது: பொதுவாக தேனீக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் யானைகள் நடவடிக்கைகளை குறைக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் யானைகள், காட்டு மாடுகளால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம். யானைகளுக்கு தேனீக்கள் மீது உள்ள அச்சத்தை உணர்ந்த அங்கு உள்ள விவசாயிகள், மலையடிவாரம், பட்டா நிலங்கள் ஆரம்பிக்கும் இடங்களில் 2 மரங்களுக்கு இடைப்பட்ட இடங்களில் கயிறு கட்டி தேனீ வளர்ப்பு பெட்டிகளை தொங்க விடுகின்றனர். யானைகள் வரும்போது, பெட்டிகளில் இடித்து விட்டாலோ, தட்டிவிட்டாலோ பெட்டிகளில் இருந்து புறப்படும் தேனீக்கள் தன்னை யாரோ தாக்க வருவதாகக் கருதி, யானைகளின் தும்பிக்கை, காது, முகம் பகுதிகளில் கொட்டும். வலி பொறுக்க முடியாமல் யானை கள் காடுகளை நோக்கி ஓடும். மீண்டும் அப்பகுதிகளுக்கு வராது.