சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி அசோக்குமார் திடீர் விருப்ப ஓய்வு. திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் நெருக்கடியா?
தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. பதவியில் இருந்த அசோக்குமார் திடீரென விருப்ப ஓய்வு பெற்றுள்ளதால் காவல்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருந்த ராமானுஜத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, உளவுத்துறை டி.ஜி.பி.யாக இருந்த அசோக்குமார் பதவியேற்றார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஏ.எஸ்.பி.யாக பணியாற்றிய அசோக்குமார், பின்னர் திருச்சி எஸ்.பி.யாகவும் பதவி வகித்தார். அதன் பின்னர், தென்சென்னை துணை ஆணையராகவும் பணியாற்றி உள்ளார். 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் அசோக்குமார் ஓய்வு பெற இருந்த நிலையில், ஓராண்டு காலம் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, அசோக்குமாரின் டி.ஜி.பி. பதவிக் காலம் வருகின்ற நவம்பர் 4-ம் தேதி வரை உள்ளது.
இந்நிலையில் அசோக்குமார், தனது டி.ஜி.பி. பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெறுவதாக அரசுக்கு தெரிவித்து இருக்கிறார். அவரது விருப்ப ஓய்வு மனுவை, தமிழக அரசு ஏற்றுக் கொண்டு அசோக்குமாரை விடுவித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அசோக்குமார் தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த புகாரையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விருப்ப ஓய்வு பெற்ற அசோக்குமாருக்கு பதிலாக சென்னை போலீஸ் கமிஷனராக பதவி வகிக்கும் டி.கே.ராஜேந்திரன் அவர்களை தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தமிழக அரசு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.