உலகளவிலான கியூ.எஸ். ரேங்கிங்கில் சென்னை ஐ.ஐ.டி.-யின் இடம் தெரியுமா?
உலக அளவில் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுக்கான நடப்பு ஆண்டுக்கானத் தரவரிசை பட்டியலை இங்கிலாந்தை சேர்ந்த கியூ.எஸ். நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், சென்னை ஐஐடி 249வது இடத்தை பிடித்துள்ளது.
உலகளவில் முதல் 400 பல்கலைக்கழகங்கள் அடங்கிய இந்த பட்டியலில் அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் பல்கலை முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை மற்றொரு அமெரிக்க பல்கலையான ஸ்டேன்ஃபோர்டும் 3வது இடத்தையும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வர்ட் பல்கலையும் பிடித்துள்ளன. பிரிட்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் தரவரிசை பட்டியலில் நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஹார்வர்டு பல்கலையுடன் இணைந்து 3வது இடத்தை கேம்பிரிட்ஜ் பகிர்ந்து கொண்டிருந்தது. பிரிட்டனைச் சேர்ந்த மற்றொரு பல்கலையான ஆக்ஸ்போர்டுக்கு இந்த பட்டியலில் 6வது இடமே கிடைத்துள்ளது.
இந்த பட்டியலில் 200வது இடத்துக்குள் இரு இந்திய பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன. கடந்த ஆண்டு பட்டியலில் 147வது இடத்தில் இருந்த இன்டியன் இஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் இந்த ஆண்டு 5 இடங்கள் பின்தங்கி 152வது இடத்தை பிடித்துள்ளது. டெல்லி ஐஐடி 179வது இடத்தில் இருந்து 185வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. பம்பாய் ஐஐடி 219வது இடத்தையும் மெட்ராஸ் ஐஐடி 249வது இடத்தையும் கான்பூர் 302வது இடத்தையும் காரக்பூர் 313வது இடத்தையும் ரூர்கி ஐஐடி 399வது இடத்தையும் பெற்றுள்ளன.
இந்த ஆய்வு 81 நாடுகளைச் சேர்ந்த 916 பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் 200 இடங்களுக்குள் 33 நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த 48 பல்கலைக்கழகங்களும் பிரிட்டனைச் சேர்ந்த 30 பல்கலைக்கழகங்களும் அதிகபட்சமாக இடம் பெற்றுள்ளன. நெதர்லாந்து 12, ஜெர்மனி 11 , கனடா, ஆஸ்திரேலியா தலா 9, ஜப்பான் 8, சீனாவைச் சேர்ந்த 7 பல்கலைக்கழகங்கள் முதல் 200 இடங்களுக்குள் வருகின்றன.
ஆய்வு, பயிற்றுவிக்கும் முறை , வேலைவாய்ப்பு, சர்வதேசத் தரம் ஆகிய தகுதிகளைக் கருத்தில் கொண்டும் கல்வித்தரம் , வேலை அளிக்கும் நிறுவனங்களின் நற்பெயர்,ஆசிரியர் மாணவர் விகிதம் பன்முகத்திறமை கொண்ட ஆசிரியர்கள், சர்வதேச மாணவர்களை ஈர்க்கும் விதம்,பயிற்றுவித்தலில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்களின் பங்களிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டும் கியூ.எஸ். தரவரிசை ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.