கருக்கலைப்புக்கு மறுத்ததால் கொலை முயற்சி

கருக்கலைப்புக்கு மறுத்ததால் கொலை முயற்சி

6ஆந்திர மாநிலத்தின் முதுக்கூர் கிராமத்தில் கர்ப்பிணிப் பெண் கருக்கலைப்பு செய்ய மறுத்ததால், கணவர் வீட்டாரின் கொலைமுயற்சிக்கு ஆளானார். ஏற்கெனவே ஒரு பெண் குழந்தைக்குத் தாயான கிரிஜா, இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருந்தபோது, ஜோதிடர் ஒருவர் மீண்டும் பெண்குழந்தைதான் பிறக்கும் என்று கூறியிருக்கிறார். அவருடைய மாமியாரும் மைத்துனியும் கிரிஜாவைக் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியுள்ளனர்.

ஆனால் கிரிஜா அதற்கு மறுத்தார். இந்நிலையில் கிரிஜா உறங்கும் நேரத்தில் அவர் வயிற்றில் அமிலம் கலந்த மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்றனர். கிரிஜா கூச்சல் போட ஊரார் வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கிரிஜா தற்போது தேறிவருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தண்ணீருக்காக 20 கோடி மணி நேரம்

உலகம் முழுவதும் பெண்களும் பெண்குழந்தைகளும் தண்ணீர் சேகரிப்பதற்காக மட்டுமே தினமும் 20 கோடி மணி நேரத்தைச் செலவழிப்பதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. உலக நீர் வாரம் கடந்த திங்களன்று தொடங்கியதை அடுத்து இந்தச் செய்தியை யுனிசெப் வெளியுட்டுள்ளது. சுத்தமான நீரும், அடிப்படை சுகாதார வசதிகளும் முப்பது நிமிடப் பயணத் தொலைவுக்குள் உலகில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் கிடைக்க வைப்பதுதான் ஐ.நா. சபையின் வளம் குன்றா வளர்ச்சி இலக்காக உள்ளது என்று யுனிசெப் குளோபல் ஹெட் ஆஃப் வாட்டர் சானிட்டேஷன் அண்ட் ஹைஜீனின் உலகத் தலைவர் சஞ்சய் விஜிசேகரா கூறியுள்ளார்.

வீட்டுக்கு அருகே தண்ணீர் கிடைக்காதபோது, தண்ணீர்த் தேவையை நிறைவேற்றும் பொறுப்பு பெண்கள், பெண் குழந்தைகளின் தலையிலேயே விழுவதாகவும் யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் குடும்பத்தோடு செலவழிக்கும் நேரமும் ஓய்வு நேரமும் குழந்தைகளைப் பராமரிக்கும் நேரமும் குறைகிறது. பெண்குழந்தைகளின் கல்வி குறிப்பாகப் பாதிக்கப்படுகிறது என்று யுனிசெப் எச்சரித்துள்ளது.

Leave a Reply