அமெரிக்க அதிபர் தேர்தலில் திடீர் திருப்பம். ஹிலாரியை டிரம்ப் முந்தியதாக கூறும் கருத்துக்கணிப்பு
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து வரும் நவம்பர் 8ஆம் தேதி அங்கு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.
இருவரும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே வெளிவந்த கருத்துக்கணிப்புகள் அனைத்தும் ஹிலாரி கிளிண்டனே வெற்றி பெறுவார் என்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று சி.என்.என். டி.வி., ராய்ட்டர் செய்தி நிறுவனம், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை ஆகிய நிறுவனங்களின் கருத்து கணிப்பு வெளிவந்தன. இந்த கருத்துக்கணிப்புகளில் ஹிலாரியை விட டொனால்ட் டிரம்புக்கு அதிக சதவிகிதம் கிடைத்துள்ளது.
சி.என்.என். கருத்து கணிப்பில் டொனால்டுக்கு 45 சதவீத ஆதரவும், ஹிலாரிக்கு 43 சதவீத ஆதரவும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ராய்ட்டர் செய்தி நிறுவன கருத்து கணிப்பில் டொனால்டுக்கு 40 சதவீதமும், ஹிலாரிக்கு 39 சதவீதமும் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒயிட்ஹவுஸ் வாச் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் டொனால்டுக்கு 40 சதவீதமும், ஹிலாரிக்கு 30 சதவீத ஆதரவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் போஸ்டு வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு மட்டும் டொனால்டு டிரம்பை விட ஹிலாரிக்கு சற்று அதிக ஆதரவு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 2 மாதம் இடைவெளி மட்டுமே உள்ள நிலையில் இந்த கருத்துக்கணிப்புகள் மக்களின் மனமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டொனால்ட் கூறியபோது இந்த மாதம் எனக்கு மகிழ்ச்சியான தருணத்தை உருவாக்கி இருக்கிறது என்று கூறி உள்ளார்.