படிப்பை இடையில் கைவிட்டவர்கள் 10 -ஆம் வகுப்பு தேர்வெழுத வாய்ப்பு
தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனம் குறித்து எடுத்துரைக்கும் அதன் தலைவர் சி.பி.சர்மா. உடன் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் கரு.முத்துக்குமார், தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி பணிச் சூழல் உள்ளிட்ட காரணங்களால் பள்ளிப் படிப்பை இடையில் கைவிட்டவர்களுக்கு 10 -ஆம் வகுப்பு தேர்வெழுத வாய்ப்பளிக்கப்படுவதுடன், இந்தத் தேர்வை அவர்கள் தமிழிலும் எழுதலாம் என தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக மாணவர்களின் நலன் கருதி, 26 ஆண்டுகளுக்குப் பிறகு பாடங்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து இந்த நிறுவனத்தின் தலைவர் சி.பி.சர்மா, சென்னை மண்டல இயக்குனர் பி.ரவி ஆகியோர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் கடந்த 26 ஆண்டுகளாகச் செயல்படும் தேசிய கல்வி வாரியமான தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனம் (“என்ஐஓஎஸ்’) சார்பில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இதில் 14 வயது பூர்த்தியானவர்கள் முதல் வயது வரம்பின்றி யார் வேண்டுமானாலும் சேர்ந்து படிக்கலாம். வடமாநிலத்தில் 73 வயது முதியவர் ஒருவர் இதன் மூலம் படித்து 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். இந்தக் கல்வி நிறுவனத்தின் மூலம் இதுவரை 35 லட்சம் பேர் படிப்பை முடித்துள்ளனர். இந்தத் தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவோருக்கு மத்திய அரசின் கல்விச் சான்றிதழ் வழங்கப்படும்.
தமிழில் பாடங்கள்: தமிழக மாணவர்களின் தேவையைக் கருத்தில்கொண்டு 26 ஆண்டுகளுக்கு பின்னர், எங்கள் நிறுவனம் 11 பாடங்களை தமிழில் மொழியாக்கம் செய்துள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து, 12 -ஆம் வகுப்புக்கான பாடங்களும் தமிழில் மொழியாக்கம் செய்யப்படும். மேலும் இதில் ராணுவ வீரர்கள், ஐஐடி முடித்த மாணவர்கள் உள்ளிட்டோருக்கான கல்வித் திட்டங்களும் உள்ளன. இதற்காக ராணுவத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது? தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனத்தில் 10 -ஆம் வகுப்பு படிக்க விரும்புபவர்கள் www.nios.ac.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். வரும் 15-ஆம் தேதிக்குள் தேர்வெழுத விண்ணப்பிப்போர், அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் தேர்வு எழுதலாம். பாடத் திட்டம், தேர்வு முறை, தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களையும் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் பெறலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: சென்னையில் 20 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 108 மையங்கள் உள்ளன. “தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனம், லேடி வெலிங்டன் வளாகம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005′ என்ற முகவரியிலும், 044-28442237, 28442239 என்ற தொலைபேசி எண்களிலும் இதுதொடர்பாக மேலும் தகவல்களை பெறலாம். . rcchennai@nios.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.