ஐஃபோன் 7′, ‘ஐஃபோன் 7 ப்ளஸ்’ அறிமுகம்: அறிக 7 அம்சங்கள்
ஐஃபோன் 7 மற்றும் ஐஃபோன் 7 ப்ளஸ் என்ற இரண்டு புதிய மொபைல் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 32 ஜிபி ஸ்பேஸ், தண்ணீர் புகாத வடிவமைப்பு, 2 லென்ஸ் கேமரா என பல சிறப்பம்சங்கள் இந்த புதிய தயாரிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
முக்கிய அம்சங்கள்
முந்தைய ஐஃபோன் தயாரிப்புகளின் சிறப்பம்சங்களோடு, கூடுதலாக மேலும் சில அம்சங்கள் ஐஃபோன் 7 மாடலில் சேர்க்கப்பட்டுள்ளன.
> வழக்கமாக பயன்படுத்தும் ஹெட்ஃபோன் இணைப்புக்கான வசதி இந்த மாடலில் கிடையாது. அதற்கு பதிலாக ஃபோனை சார்ஜ் செய்யும் போர்ட்டில் ஹெட்ஃபோனை இணைத்துக் கொள்ளலாம் அல்லது ப்ளூடூத் ஹெட்ஃபோன்களை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் பழைய ஹெட்போன்களையே பயன்படுத்த நினைப்பவர்கள் அதற்கான ஒரு பிரத்யேக அடாப்டரை வாங்கவேண்டும்.
> ஆப்பிள் ஏர்பாட்ஸ் என்ற புதிய ஹெட்ஃபோனை அக்டோபர் மாதம் முதல் ஆப்பிள் நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. வயர்லஸ் ஹெட்ஃபோனான இதனை அனைத்து ஆப்பிள் தயாரிப்புகளுடன் இணைத்துக் கொள்ளலாம். ஐஃபோனில் இருக்கும் சிறு செயலியை இதன் மூலமே இயக்கலாம். இதன் விலை 160 டாலர்கள் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.10,000)
> 16 ஜிபி என்பது முந்தைய ஐஃபோன் மாடல்களின் ஆரம்ப நிலையாக இருந்தது. ஐஃபோன் 7 மாடலின் ஆரம்ப மாடலே 32 ஜிபியுடன் வருகிறது. மேலும் 128 ஜிபி, 256 ஜிபி மாடல்களும் கிடைக்கும். புதிய ஐஃபோன் மாடல்கள் நீர் புகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
> ஐஃபோன் 7-ல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 6S மாடலை விட இதன் ஒலித்திறன் இரு மடங்கு அதிகமாக இருக்கும். அதே போல முந்தைய மாடல்களை விட கூடுதலாக 2 மணி நேரம் வரை பேட்டரி திறன் இருக்கும்.
> கேமரா பிளாஷில் 4 எல்.ஈ.டி லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இது இருட்டிலும் பிரகாசமான புகைப்படங்களை எடுக்க உதவும். மேலும், 7 ப்ளஸ் மாடலில் 2 கேமரா லென்ஸுகள் பொருத்தப்பட்டுள்ளன.
> ஐபோன் 7 விலை 650 டாலர்கள் (ரூ. 43,192) என்றும், 7 ப்ளஸ் விலை 770 டாலர்கள் (ரூ. 51,166) என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஆப்பிள் வாட்ச் சீரியஸ் 2 என்ற புதிய ரக ஆப்பிள் வாட்ச்கள். இவை நீர் புகாத வகையில் வடிவமைக்கட்டுள்ளன. ஆப்பிள் வாட்சுக்காக பிரத்யேகமாக போகிமான் கோ செயலியும் தயாரிப்பில் உள்ளது.