தாயாருக்கு வீடுகட்டி கொடுப்பேன். தங்கம் வென்ற மாரியப்பன் நெகிழ்ச்சி
பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேல், உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கே பெருமை பெற்று கொடுத்துள்ளார். மேலும் மற்றொரு இந்தியப் போட்டியாளரான வருண் சிங் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இருவருக்கும் நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்களும் பரிசுகளும் குவிந்து வருகின்றன.
தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ. 75 லட்சமும் வருணுக்கு ரூ. 30 லட்சமும் வழங்குவதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் அறிவித்துள்ள நிலையில் மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி பரிசுத்தொகையை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சேலத்திலிருந்து 50 கி.மீ. தூரத்தில் உள்ள பெரியவடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன். 5 வயதில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் ஓரத்தில் சென்றுகொண்டிருந்த மாரியப்பன் மீது பேருந்து மோதியதால் அவரது வலது கால் சிதைந்தது. ‘அதற்குப் பிறகு அந்தக் கால் வளரவேயில்லை. காயங்களும் ஆறவில்லை.
தற்போது காய்கறி விற்பனை செய்துவரும் அவருடைய தாயார், மாரியப்பனின் காலைச் சரிசெய்வதற்காக 3 லட்சம் ரூபாய் வரை மருத்துவச்செலவு செய்துள்ளார். ‘அதற்கான கடனை இன்னும் அவர் அடைக்கவில்லை என்பது பெருஞ்சோகம்.
14 வயதில் பள்ளியில் உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்துகொண்டு 2-ம் இடம் பிடித்த மாரியப்பனுக்கு அதுமுதல் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 2013-ல் தேசிய அளவிலான போட்டியில் மாரியப்பன் கலந்துகொண்டபோது பயிற்சியாளர் சத்யநாராயணனைச் சந்தித்துள்ளார். தற்போது அவர்தான் மாரியப்பனுக்குப் பயிற்சியளித்துவருகிறார். மாரியப்பனின் இந்த வளர்ச்சிக்கு அவரும் ஒரு முக்கிய காரணம்.
ரியோ பாராலிம்பிக் போட்டிக்கு முன்பு மாரியப்பன் ஒரு பேட்டியில் கூறியதாவது: முதலில் ஒரு நல்ல வேலை தேடவேண்டும். என் தாயாரை நல்லபடியாகக் காப்பாற்றவேண்டும் என்று கூறினார். இப்போது தங்கம் வென்றபிறகு மாரியப்பன் என்ன சொல்கிறார்? ‘நேற்று தாயாரிடம் போனில் பேசினேன். நிச்சயம் நீ தங்கம் வெல்வாய் என வாழ்த்தினார். இப்போது, தாயாருக்கு ஒரு நல்ல வீடு கட்டித்தரவேண்டும்’ என்கிறார் தங்கமகன்.