நோயற்ற வாழ்வுக்கு வாழை இலை சாப்பாடு!
திருமணம், வீட்டு விசேஷங்களில் மட்டுமே வாழை இலையில் உணவு பரிமாறப்படுவதைப் பார்க்க முடிகிறது. சில இடங்களில் வாழையிலைகள் ஓரங்கட்டப்பட்டு, தீமை விளைவிக்கும் நெகிழித் தட்டுகளும் காகிதங்களும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டன. ஆனால், வாழை இலையின் மகத்துவத்தைப் பன்னெடுங்காலம் முன்பே உணர்ந்து, உடல் ஆரோக்கியம் காக்க அதை எல்லா வேளையிலும் பயன்படுத்திய பண்பாடு நம்முடையது.
அதைப் பதிவு செய்யும் வகையில், வாழை இலையில் உணவருந்துவதால் கிடைக்கும் ஏராளமான பலன்களைக் கீழ்க்காணும் அகத்தியர் குணவாகடப் பாடல் தெளிவுபடுத்துகிறது:
“தொக்கினுறு மின்னுஞ் சுகபோ கமுமன்னும்
அக்கினி மந்தம் பலமொடு திக்கிடுகால்
பாழை யிளைப்புமறும் பன்னுபித்த முஞ்சமனமாம்
வாழை யிலைக்குணரு வாய்”
தேகத்துக்கு தேஜஸ்
தேகத்தின் அழகைக் கூட்டுவதற்காகத் தினமும் விலை உயர்ந்த கிரீம்களையும் ஜெல்களையும் தவறாமல் பூசியும் பயனில்லையே என அங்கலாய்ப்பவர்கள், வாழை இலையில் சாப்பிடத் தொடங்கிவிட்டால்போதும், தேகம் பளபளப்படையும். வாழை இலையில் உணவருந்துவதால், உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்பட்டு உடல் தூய்மையடையும்.
பித்த நோய்கள் மறைய
உடலில் பித்தத்தின் அளவை குறைக்கவும், உயர் ரத்தஅழுத்தம், தலைவலி, வயிற்றுப் புண், தோல் நோய்களின் தீவிரம் குறையவும் வாழை இலையில் உணவருந்தலாம். வாழை இலைக்குக் குளிர்ச்சியுண்டாக்கிச் செய்கை இருப்பதால், பித்தம் சார்ந்த நோய்கள் அனைத்தும் சாந்தப்படும். நோய்களைத் தவிர்க்க ஆசைப்படு பவர்களுக்கு `வாழை இலை உணவு’ அற்புதமான தேர்வு.
செரிமானம் அதிகரிக்க
உண்ட உணவு செரிக்காமல் வயிற்றுக்குள் ஏற்படும் `கடமுட’ ஓசையை அடிக்கடி கேட்பவர்களும், சிறிதளவு சாப்பிட்டாலும் வயிறு உப்பிக்கொண்டு அவதிப்படுபவர்களும் வாழை இலையில் சாப்பிட்டுவந்தால் நல்ல செரிமானம் உண்டாகிப் பிரச்சினைகள் மறையும். மந்தத்தைப் போக்கும் குணம், வாழை இலைக்கு உண்டு. சூடான உணவு வகைகளை வாழை இலையில் வைத்துச் சாப்பிடும்போது, அதில் உண்டாகும் அற்புதமான இயற்கை மணமே பசி உணர்வைத் தூண்டிச் செரிமானச் சக்தியை அதிகரிக்கும். உணவின் மணத்துக்கும் பசி உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
நம்முடைய முதன்மை உணவான சோறும், மரக்கறி உணவு வகைகளையும் தாராளமாக வைத்துச் சாப்பிட வாழை இலையைத் தவிரச் சிறந்த உண்கலம் வேறு இல்லை. உணவு செரிமானத்துக்குத் தேவையான துணைப்பொருட்கள் அனைத்தும் வாழை இலையில் உண்டு. அதன் மற்ற உறுப்புகளான வாழைப் பூ, தண்டு, காய், பழம் ஆகியவற்றையும் சாப்பிட்டுவந்தால், பல்வேறு உடல் உபாதைகளிலிருந்து விடுதலை பெறலாம்.
நோய்களிலிருந்து விடுதலை
எந்தெந்த உணவுப் பொருட்களில் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்ஸ் கொட்டிக் கிடக்கிறது எனத் தேடுவதற்குப் பதிலாக, விரும்பும் உணவு வகைகளை வாழை இலையில் வைத்துச் சாப்பிட்டால், தேவைக்கு அதிகமாகவே ஆன்ட்டிஆக்ஸிடண்ட் கிடைக்கும். உடல் செல்களின் அழிவைத் தடுக்கக்கூடியதும், நோய்கள் வராமல் பாதுகாக்கக்கூடியதுமான சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடண்டான பாலி ஃபீனால்கள் (Epigallocatechin gallate) வாழை இலையில் பொதிந்திருக்கின்றன. அதிலுள்ள Polypheno> oxidase, நடுக்குவாத நோய் (பார்கின்சன் நோய்) வராமல் தடுக்கிறது.
உணவுப் பொருட்களின் சுவை தெரியாமல் திண்டாடும் `சுவையின்மை’ நோயாளிகளும் உடல் பலவீனமானவர்களும் வாழை இலையில் தொடர்ந்து புசித்துவந்தால், அறுசுவையையும் உணர்ந்து உடல் பலமடையும், விந்தணுக்களும் பெருகும்.
வாழை இலைப் பொதிவு
வாழை இலையில் உணவைப் பொதிந்து கொடுத்த காலம் மாறி, தீமை விளைவிக்கும் நெகிழி (பிளாஸ்டிக்) பைகளில் உணவைப் பொதிந்து தருவது ஆரோக்கியத்தைக் கெடுக்கக்கூடிய அம்சம். தொலைவான பயணங்களின்போதும் ஹோட்டல்களிலிருந்து உணவை வாங்கி வரும்போதும், பிளாஸ்டிக்குக்குப் பதிலாக வாழை இலையைப் பயன்படுத்துவது நல்லது.
அதேபோலச் சம்மணமிட்டு வாழை இலையில் உணவருந்தும்போது, வயிற்றுப் பகுதிக்கும் நல்ல பயிற்சி கிடைக்கிறது. சிறுவயதிலேயே வாழை இலையில் சாப்பிடும் பழக்கத்தைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தால் செரிமானம் சார்ந்த நோய்களைத் தடுக்கலாம், பசி உணர்வும் அதிகரிக்கும்.
நெகிழியைத் தவிர்ப்போம்
தொடர்ந்து பல நாட்களுக்கு நெகிழித் தட்டுகளில் சூடான உணவை வைத்துச் சாப்பிட்டுவருவதால், அதிலுள்ள மெலமைன், பாலிவினைல் குளோரைடு போன்ற வேதிப்பொருட்கள் உணவுடன் கலந்து நச்சுத் தன்மையை ஏற்படுத்தக் கூடும். வாழை இலையைப் போல, மெழுகு சாயம் பூசப்பட்ட காகிதங்களும் சில இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் உண்பதால் காகிதங்களில் உள்ள சாயம் உடலில் சிறிது சிறிதாக நச்சுத் தன்மையை ஏற்றும். அதற்குப் பதிலாகப் பசுமையான வாழை இலையில் வெதுவெதுப்பான சோறு, கமகமக்கும் குழம்பு, காய்கறி, கீரைகள், ரசம், மோரை நம் மரபு முறைப்படி சாப்பிடும்போது, ஆரோக்கியத்துக்கு எந்தக் குறைவும் வராது.
மேற்கத்தியக் கலாச்சார மோகத்தால் பஃபே முறையில் நின்றுகொண்டே சாப்பிடப் பழகிவிட்ட நாம், இனிமேலாவது பொறுமையுடன் அமர்ந்து வாழை இலையில் சாப்பிடுவது நல்லது! இந்த மாற்றம் நம் உடலுக்கு அவசியம் தேவை.
வைத்துச் சாப்பிடும் வேறு இலைகள்
> பலா இலையில் சாப்பிடுவதால், பித்தம் அதிகரிக்கும் அதேநேரம் பெருவயிறும் குன்மமும் குறையும்.
> தாமரை இலையில் உணவருந்துவதால், பித்த, வாத நோய்களும் செரியாமையும் உண்டாவதால், அதில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
> இவை தவிர தேக்கு இலைகளும் உண்கலன்களாக பயன்படுகின்றன.