காவிரி பிரச்சனை: விஜய்சேதுபதியின் வீடியோ பேட்டி
காவிரி பிரச்சனையால் அப்பாவி தமிழர்கள் பெங்களூரிலும் கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் தாக்கப்படுவதை கண்டித்து நடிகர் சங்கம் உள்பட பல நடிகர், நடிகையர் கண்டனம் தெரிவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் பிரபல நடிகர் விஜய்சேதுபதி இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
காவிரி பிரச்சனை குறித்து நான் பேச விரும்பவில்லை. ஆனால் இந்த பிரச்சனையை வைத்து அப்பாவி பொதுமக்கள் தாக்கப்படுவதை நினைத்தால் கவலை ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்காகத்தான் நாம் ஓட்டு போட்டு தலைவர்களை தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த பிரச்சனையை அவர்கள் கையாளட்டும். அவர்கள் இதற்கு ஒரு நல்ல தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
சாதாரண பொதுமக்கள் ஒருநாள் வேலைக்கு செல்லவில்லை என்றாலும் அவர்களுடைய குடும்பம் பெரும் கஷ்டத்தை சந்திக்க நேரிடும். வேலைக்கு சென்றவர் நல்ல முறையில் வீடு திரும்ப வேண்டும் என்று அவருடைய குடும்பமே காத்திருக்கும்.
இந்த பிரச்சனையை காலங்காலமாக சிலர் தூண்டி வருகின்றனர். அதை நாம் உணர வேண்டும். நாம் அனைவரும் அன்பை மட்டுமே பரிமாறிக்கொள்ள வேண்டும். எனது மொழியை எனது தாய் போல் நேசிக்கின்றேன். அதேபோல் நாங்கள் உங்கள் மொழியையும், உங்களையும் நேசிக்கின்றோம். எனவே இந்த பிரச்சனையை நமது அரசாங்கம் தீர்த்து வைக்க வலியுறுத்த வேண்டுமே தவிர வன்முறையில் இறங்குவது முறையாகாது. நான் மிகவும் வேண்டி கேட்டுக்கொள்வது ஒன்றுதான். வன்முறையை கைவிடுவோம். தயவு செய்து அப்பாவிகள் மீதான தாக்குதல் வேண்டாம். இவ்வாறு விஜய்சேதுபதி கூறியுள்ளார்.