புதுவை முதல்வருக்காக ராஜினாமா செய்த எம்.எல்.ஏ
புதுவையில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இருப்பினும் தேர்தலில் நிற்காத நாராயணசாமியை காங்கிரஸ் மேலிடம் முதல்வராக நியமனம் செய்தது.
இதனால் ஆறு மாதங்களுக்குள் முதல்வர் நாராயணசாமி தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகவேண்டும் என்பதால் தற்போது அவர் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதற்கு காங்கிரஸ் மேலிடமும் ஒப்புதல் கொடுத்துவிட்டதால் அந்த தொகுதியின் எம்எல்ஏவான ஜான்குமார் தற்போது ராஜினாமா செய்துள்ளார்.,
இன்று காலை சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு வந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்த ஜான்குமார், ‘பிரதிபலன் ஆதாயம் பார்த்து தொகுதியை விட்டு தரவில்லை. கட்சித்தலைமை உத்தரவை கடைபிடித்தேன். நான் பல கோடி பெற்று தொகுதியை விட்டுத்தந்ததாக யாராவது நிரூபித்தால் எனது சொத்து முழுவதையும் தர தயார்.
வரும் 1ம் தேதி முதல் முதல்வர் வெற்றிக்காக பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்குகள் பெறுவோம். சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் வெல்வார். முதல்வரால் எனது தொகுதி வளர்ச்சியடையும். அதே நேரத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லித்தோப்பு தொகுதியில் நான் கண்டிப்பாக போட்டியிடுவேன்” என்று கூறினார்.
ஜான்குமாரின் ராஜினாமா குறித்து சபாநாயகர் வைத்திலிங்கம் கூறியபோது, “ஜான்குமார் எம்எல்ஏவின் ராஜிநாமா கடிதம் ஏற்கப்பட்டது. நெல்லித்தோப்பு தொகுதி காலியிடமாக அறிவித்து அரசாணை வெளியாகும். காலியிட விவரம் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.