ஆதார் தகவலை தவறாக பயன்படுத்தினால் 3 ஆண்டுகள் ஜெயில். அரசாணை வெளியீடு
இந்திய குடிமக்களின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் ஆதார் அட்டைகளை சிலர் தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் ஆதார் கார்டு தகவல்களை தவறாக பயன்படுத்தினால் ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்க சட்டத்தில் விதிகள் உள்ளதாகவும், இந்த தகவலை அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஆதார் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள புதிய விதிகளின்படி அரசு மற்றும் தனியார் அமைப்புகள் பொதுமக்களின் ஆதார் தகவல்களைப் பெறும்போது சம்பந்தப்பட்ட நபர்களின் ஒப்புதலை கண்டிப்பாகப் பெற வேண்டும் என்றும்
அந்த தகவல்கள் எதற்காகப் பயன்படுத்தப்பட உள்ளன என்பது குறித்து அட்டைதாரரிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வேறு எந்த பணிக்கும் அந்த தகவல்களைப் பயன்படுத்தக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
‘ஆதார் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுப்பது, பொது மக்களின் அந்தரங்கத்தைப் பாதுகாப்பது ஆகியவற்றின் அடிப்படையில் புதிய விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
மேலும் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க ஏதுவாக புகார் மையம் தொடங்கப்படும்’ என்று ஒருங்கிணைந்த அடையாள திட்ட ஆணைய (யு.ஐ.டி.ஏ.ஐ.) தலைமை நிர்வாக அதிகாரி அஜய்பூஷண் பாண்டே தெரிவித்துள்ளார்.