மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் திடீர் திருப்பம்
2ஜி வழக்குடன் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை இணைத்து விசாரிக்கக் கூடாது என்றும் இரு வழக்குகளையும் தனித்தனியாக விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மாறன் சகோதரர்கள் தாக்கல் செய்த மனு இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2ஜி வழக்குடன் ஏர்செல் – மேக்சிஸ் வழக்கையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில் 2ஜி வழக்குக்கும், ஏர்செல்-மேக்சிஸ் வழக்குக்கும் தொடர்பு இல்லை என்று தயாநிதி – கலாநிதி மாறன் தரப்பு இதுவரை வாதம் செய்து வந்தது. இந்நிலையில் 2ஜி வழக்குடன் ஏர்செல் – மேக்சிஸ் வழக்குக்கு தொடர்பு இல்லை என்பதால், அதனை வேறு நீதிமன்றத்தில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மாறன் தரப்பில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரணை செய்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி, ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு 2ஜி வழக்குடன் சேர்த்தே விசாரணை செய்யப்படும் எனவும், ஏர்செல் – மேக்சிஸ் வழக்கை டெல்லி சிபிஐ நீதிமன்றமே தொடர்ந்து விசாரணை செய்யும் என்றும் உத்தரவிட்டு, மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.