அருண்ஜெட்லியை விட நான் தான் சிறந்த நிதியமைச்சர். சுப்பிரமணியன் சுவாமி
சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னாரக இருந்த ரகுராம்ராஜன் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தற்போது நிதியமைச்சர் அருண்ஜெட்லியை வம்புக்கு இழுத்துள்ளார். தன்னைவிட அருண்ஜெட்லி எந்த வகையில் சிறந்தவர் என்றும் அவரை விட தன்னால் சிறந்த நிதியமைச்சராக செயல்பட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த கருத்து பாஜக தலைவர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் செய்தியாளர்களின் பேட்டியளித்த சுவாமி, அருண்ஜேட்லி மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்துப் பேசியதாவது:
அருண் ஜேட்லி ஒரு வழக்குரைஞர்; நானோ பொருளாதார நிபுணர். எனவே, நிதித் துறை குறித்த அறிவாற்றலைப் பொருத்தவரை அவர் எந்த வகையில் என்னை விட மேன்மையானவராக இருக்க முடியும்? நான் நிதியமைச்சராக இருந்தால், ஜேட்லியை விடச் சிறப்பாகச் செயல்படுவேன். அதேவேளையில், ராஜ்நாத் சிங்கைப் பொருத்த வரை மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். சர்தார் வல்லபபாய் படேலுக்குப் பிறகு நாட்டுக்குக் கிடைத்த சிறந்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
மேலும் ஜம்முகாஷ்மீர் குறித்து சுவாமி கூறியபோது, ‘கடந்த பேரவைத் தேர்தலில் ஜம்மு மற்றும் லடாக் பகுதியில் பாஜக வெற்றி பெற்றது. காஷ்மீர் பிராந்தியத்தில் பிடிபி வென்றது. இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி அரசை அமைத்து ஆக்கப்பூர்வமாகச் செயல்படலாம் என்று நினைத்தோம். ஆனால் அந்த பரிசோதனை முயற்சி தற்போது தோல்வியில் முடிந்ததாகவே கருதுகிறோம். இதனால், முதல்வர் மெஹபூபா முஃப்தி தலைமையிலான அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அங்கு அமல்படுத்த வேண்டும்’ என்று கூறினார்.