வரலாற்று நூல்களைப் படித்தால்தான் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள முடியும்: மேகாலய ஆளுநர் வி.சண்முகநாதன்
பெ.நா.பாளையம்: வரலாற்று நூல்களைப் படித்தால்தான் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள முடியும் என மேகாலய ஆளுநர் வி.சண்முகநாதன் பேசினார்.
மதுரை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் எழுதிய “சுவாமி விவேகானந்தரைப் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை – பாகம் 2′ எனும் நூல் வெளியீட்டு விழா பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலர் சுவாமி அபிராமானந்தர் தலைமை வகித்தார். மேகாலய மாநில ஆளுநர் வி.சண்முகநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நூலை வெளியிட அதை, சுவாமி அபிராமானந்தர் பெற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, மேகாலய ஆளுநர் வி.சண்முகநாதன் பேசியதாவது: இந்தியாவில் சிறந்த கலாசாரம் உள்ளது. கடவுள் பெயரால் சண்டையிட வேண்டாம் என்பதே இந்தியாவின் கலாசாரம் ஆகும். உலகில் உள்ள எந்த நாட்டிலும் இதுபோன்ற உன்னதமான கலாசாரம் இல்லை. இதை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் உணரவேண்டும். இந்தியா என்பது நமது நாடு. வேதங்கள், ஞானம், ராமாயணம், மஹாபாரதம், திருவருட்பா, திருவெண்பா, திருக்குறள் உள்ளிட்ட ஞான நூல்கள் இந்தியாவில் மட்டுமே உள்ளன. அதேபோல, இந்தியாவில்தான் துறவிகள் அதிகம் உள்ளனர். எதிர்கால இந்தியாவை சிறந்ததாக அமைக்க மாணவர்கள் 3 விதமான உறுதிகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் மாணவர்கள் தங்கள் உடலைப் பேணிக்காக்க வேண்டும். அதற்கு தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும். இரண்டாவதாக மனதைக் கட்டுப்படுத்தும் மனப் பயிற்சியும் மேற்கொள்ளவேண்டும். மூன்றாவதாக வரலாற்று நூல்களைப் படிக்க வேண்டும். வரலாற்று நூல்களைப் படித்தால்தான் நல்ல எண்ணங்கள் உருவாகும் என்றார்.