யூரி ராணுவ முகாம் தாக்குதல் குறித்து கிடைத்துள்ள புதிய அதிர்ச்சி தகவல்
சமீபத்தில் யூரி ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் ராணுவ உடையில் ஊடுருவியதாக தற்போது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ராணுவ உயரதிகாரி ஒருவர் கூறியபோது, “ராணுவ உடையில் இருந்த 4 தீவிரவாதிகளும் கம்பி வேலியை துண்டித்து முகாமுக்குள் நுழைந்துள்ளனர். ராணுவ வீரர்களை போலவே முடி திருத்தமும் செய்துள்ளனர். தற்கொலைப்படை தீவிரவாதிகளுக்கான எவ்வித சாயலும் அவர்களிடம் இல்லை.
முகாமின் முழு வரைபடமும் அவர்களிடம் இருந்திருக்கக்கூடும். முகாமுக்குள் நுழைந்ததும் சமையல் அறைக்கு சென்றுள்ளனர். அதன் அருகில் ஒரு மறைவிடத்தில் பதுங்கி இருந்துள்ளனர்.
அங்கிருந்துகொண்டு முகாமில் இருந்த டீசல் பேரல்களை சரமாரியாக சுட்டு தீப்பிடிக்கச் செய்துள்ளனர். இதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
கூடாரங்களுக்குள் தூங்கிக் கொண்டிருந்த வீரர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் வெளியே ஓடிவந்தபோது அவர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
எனினும் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கிய 12 நிமிடங்களில் 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுவிட்டோம். தனியாகப் பிரிந்து சென்ற மற்றொரு தீவிரவாதியை அங்கிருந்து 40 மீட்டர் தொலைவில் சுட்டு வீழ்த்தினோம்’ என்று கூறினார்.