அமெரிக்க பெடரல் வங்கியின் செயல்பாட்டால் இந்தியாவில் பாதிப்பு வருவது ஏன்?
உலக வர்த்தகமே அமெரிக்க டாலர் மதிப்பில்தான் இயங்கி வருகிறது. எண்ணெய், சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி என அனைத்தும் அமெரிக்க டாலர்களில்தான். உலகையே ஆட்டிப் படைக்கும் அமெரிக்கா அப்பாடக்கராக எப்படி இருக்கிறது? இது படை சார்ந்த விஷயம் அல்ல, பணம் சார்ந்த விஷயம்.
ஃபெடரல் வங்கி என்பது அமெரிக்காவின் மத்திய வங்கி ஆகும். சுருக்கமாக ஃபெட் என்றும் அழைப்பார்கள். இந்தியாவில் உள்ள ரிசர்வ் வங்கியைப் போலத்தான் அமெரிக்க ஃபெடரல் வங்கி.அமெரிக்க டாலர்களை அச்சிடுவது, விலைவாசியை சீராகப் பராமரிப்பது இந்த வங்கியின் முக்கிய செயல்பாடுகள் ஆகும். உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பான இது, அமெரிக்க டாலரை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.
அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமை மேம்பாடு குறித்து விவாதிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் எட்டு முறை ஃபெடரல் வங்கி தனது நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டத்தை நடத்தி வருகிறது. FOMC (Federal Open Market Committee) என அழைக்கப்படும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொருளாதார நிலையை மேம்படுத்தும் பல திட்டங்களை ஃபெடரல் வங்கி வகுத்து வருகிறது. இந்தக் கூட்டம் இரண்டு நாட்கள் நடக்கும்.
கடைசியாக ஃபெடரல் வங்கியின் கூட்டம் நேற்று (21.09.16) நடந்தது. இந்தக் கூட்டத்திலும் வட்டி விகிதங்கள் உயர்த்தப் படவில்லை. ஆனால், வரும் தேதிகளில் நடைபெற உள்ள ஃபெடரல் வங்கியின் கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது.
அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினால் என்ன என்று நீங்கள் கேட்கலாம். தங்கத்தின் விலை உலகப் பொருளாதாரப் போக்கை ஒட்டியே அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக, அமெரிக்காவில் ஏற்படும் மாற்றங்கள் தங்கத்தின் விலையை பெரிதும் தீர்மானிக்கும். அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினால், டாலரின் மதிப்பு உயரும். டாலரின் மதிப்பு உயர்ந்தால், தங்கம் விலை குறையும்.
இந்தியா மற்றும் உலகின் பல நாடுகள் தமது ஏற்றுமதி மற்றும் இறக்குமதிப் பொருட்களை அமெரிக்க டாலர் நாணயத்தில்தான் கணக்கிட்டு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இந்திய அரசாங்கம் வாங்கும் கச்சா எண்ணெய் உட்பட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரிபாகங்கள், செல்போன் உதிரிபாகங்கள், அதேபோல ஏற்றுமதி செய்யும் மென்பொருள், இரும்பு, உணவு தானியங்கள் உட்பட அனைத்துப் பொருட்களும் அமெரிக்க டாலர் மதிப்பில்தான் வாங்கி, விற்கப்படுகிறது.
இதனால் என்ன பாதிப்பு என்று கேட்கிறீர்களா? அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும்பட்சத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறையும். இதனால் இந்திய பங்குச் சந்தைகள் பலத்த சரிவடையும். முதலீட்டாளர்கள் முதலீடு செய்த பணம் பறிபோகும்.
ரூபாயின் மதிப்புக் குறைவதால் அந்நிய முதலீடு குறையும். இதனால் அந்நிய முதலீட்டாளர்கள் அதிகளவில் இந்தியாவிலிருந்து பணத்தை வெளியேற்றுவார்கள். டாலர் மதிப்பு உயர்வால் கச்சா எண்ணெய் உட்பட இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி வரும். இதனால் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு விலை ஏறும். அத்தியாவசிய உணவுப் பொருட்கள் முதல், வாகனம், பிரிட்ஜ், செல்போன், டிவி உள்ளிட்ட சாதனங்களின் விலை உயரும்.
டாலர் மதிப்பு உயர்வால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை இந்தியாவில் ஏறத்துவங்கும். பணவீக்கம் உயர்வதனால், அதை கட்டுக்குள் கொண்டுவர நமது ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இதன் தாக்கம் தனிநபர், கம்பெனிகள் என அனைத்து தரப்பினரையும் பாதிக்கும்.
இந்தியாவில் மட்டுமின்றி, உலகளவில் பல நாடுகளிலும் இதுபோன்ற பாதிப்பு ஏற்படும். பல நாடுகளின் பங்குச் சந்தை, நாணய மதிப்பு என பல நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிப்புக்கு உள்ளாக்கும் வல்லமை படைத்ததுதான் இந்த அமெரிக்க டாலர்.
ஆக உலகில் உள்ள மற்ற நாணயங்களின் மதிப்புக்கும் அமெரிக்க டாலருக்கும் நிறைய தொடர்பு உண்டு. அமெரிக்காவில் நிகழும் வட்டி விகிதப் போக்கு உலக அளவில் எப்படி பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது .