3வது U-19 ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கையில் நடத்த ஒப்புதல்
ஆசிய அளவில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான U-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் U-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெற்றது. இந்த போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதியது. இந்த போட்டி டை’யில் முடிந்ததால் இரண்டு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற 2வது U-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது. இந்நிலையில் 3வது U-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் டிசம்பரில் இலங்கையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஒப்புதலை இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக்குழு நேற்று வழங்கியுள்ளது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பொது மேலாளர் துசித் பெரேரா, போட்டித்தொடர்களுக்கான மேலாளர் சுல்தான் ராணா ஆகியோர் இந்த தொடருக்கான இயக்குனர்களாக செயலாற்ற நிர்வாகக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த போட்டி டிசம்பர் 8-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த தொடர் குறித்த போட்டி அட்டவணை உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.