இதுதான் ஜெயலலிதாவின் மெடிக்கல் ரிப்போர்ட்டா?

இதுதான் ஜெயலலிதாவின் மெடிக்கல் ரிப்போர்ட்டா?

jayalalithaதமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவுக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் அவருக்கு வேறு சில பிரச்சனைகள் இருப்பதாகவும், அதற்காகவும் சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபல பத்திரிகை ஒன்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவர்கள் கூறியதை செய்தியாக வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

1. ஜெயலலிதா எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்?

“லேசான காய்ச்சல், உடலில் நீர்ச்சத்து குறைந்துவிட்டது. அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்” என அப்போலோ மருத்துவமனை அதிகாரப்​பூர்வமாகத் தெரிவித்தது.

2. சாதாரண காய்ச்சலுக்கு எல்லாம் மருத்துவமனைக்கு முதல்வர் செல்வாரா?

காய்ச்சல் மட்டுமே காரணம் இல்லை!

3. முதல்வருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது?

அப்போலோ மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தோம். ‘‘ஜெய​லலிதாவுக்கு சர்க்கரை நோய் இருப்பது எல்லோருக்கும் தெரியும். சர்க்கரை நோய்தான், இப்போது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக, பெண்​களுக்கு சிறுநீர் பாதை நோய்த் தொற்று (யுடிஐ) ஏற்படுவது இயற்கை. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சிறுநீர் பாதை நோய்த் தொற்று எளிதாக ஏற்படும். சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு சிறுநீர் தொற்று ஏற்பட்டால், வயிற்று வலிவரும். எனவே, ஆரம்பத்திலே அதைக் கண்டறிந்துவிடலாம். சர்க்கரை நோய் இருந்தால், அதைக் கண்டறிவது கடினம். வலியை சர்க்கரை நோயாளிகளால் உணர முடியாது. அந்த நிலைதான், முதல்வருக்கு ஏற்பட்டது. கிருமித் தொற்று தீவிரமடைந்து சீறுநீரகத்தைப் பாதித்துள்ளது. பின்னர்தான், அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. சாதாரணக் காய்ச்சல் என்றுதான் வீ்ட்டில் இருந்தே மருத்துவம் செய்துள்ளார்கள். ஆனால், சிறுநீரகத்தில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டதால், கடந்த 22-ம் தேதி குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும், ரத்த அழுத்தமும் குறைந்து, லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. அதனால்தான், அவரை ஐ.சி.யூ-வில் வைத்து முதற்கட்ட சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது” என்றனர்.

4. சிறுநீரகக் கோளாறு பின்னணியில் உள்ள சிக்கல்கள் என்ன?

“கட்டுக்குள் இல்லாத சர்க்கரை நோய், இதயக்கோளாறு, உயர் ரத்த அழுத்தம் போன்ற சிக்கல்கள் இருந்தால், அது நாட்பட்ட சிறுநீரகக் கோளாறுகளை ஏற்படுத்தும்” என்று மருத்துவக் குறிப்புகள் சொல்கின்றன. ரத்தத்தில் உள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்றுவதை சிறுநீரகம் கட்டுப்படுத்தும். சில நேரங்களில், குறிப்பாக கோளாறு அதிகமான நிலையில் சிறுநீரில் ரத்தச்சிவப்பணுக்கள் வெளியேற்றமும் பரிசோதனையில் தென்படும்.

5. முதல்கட்ட சிகிச்சையாக என்ன செய்தார்களாம்?

ஒரேநேரத்தில் காய்ச்சலைக் குறைக்கவும், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கவும், மருந்துகள் செலுத்தி இருக்கிறார்கள். மூச்சுத் திணறலைக் குறைக்க ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது.

6. காய்ச்சல் எப்போது குறைந்தது?

மருத்துவமனையில் 22-ம் தேதி இரவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். 23-ம் தேதி மாலையில்  அவருக்குக் காய்ச்சல் குறைந்தது. சிறுநீரகத்தின் செயல்பாடும் கொஞ்சம் நல்ல நிலைக்கு வந்தது. ரத்த அழுத்தமும் சீரடையத் தொடங்கியது. அவர், 24-ம் தேதி வழக்கமான உணவுகளை எடுத்துக்கொண்டார். ஐ.சி.யூ-வில் இருந்து சாதாரண அறைக்கு 25-ம் தேதி மாற்றப்பட்டார். அதன் பிறகு, தேவைப்பட்ட நேரங்களில் மட்டும் ஆக்சிஜன் கொடுக்கப்​படுகிறது.

7. அப்போலோ மருத்துவமனையில் எந்தப் பகுதியில் ஜெயலலிதா உள்ளார்?

இரண்டாவது தளத்தில், அவர் தங்கவைக்கப்​பட்டு உள்ள அறையின் எண் 2008. இது, ஹோட்டல் சூட் மாதிரி இருக்கும். அந்தத் தளத்தில் உள்ள அனைத்து அறைகளையும் எடுத்துக்கொண்டார்கள். அந்த அறைகளில் ஜெயலலிதாவின் உதவியாளர்கள், டாக்டர்கள், அரசு அதிகாரிகள், சசிகலா குடும்பத்தினர் இருக்கிறார்கள். அமைச்சர்கள் உள்பட யாரும் 2-வது தளத்தில் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள், முதல் தளத்துடன் திரும்பிவிடுகிறார்கள்.

8. ஜெயலலிதாவின் மனநிலை எப்படி இருக்கிறது?

மருத்துவமனைக்கு வந்ததில் இருந்தே, வீட்டுக்குப் போக வேண்டும் என்ற நினைப்பில் முதல்வர் இருக்கிறார் என்கிறார்கள். ‘எனக்கு இன்ஃபெக்‌ஷன் ஆனதைக் கண்டுபிடிக்காமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?’ என்று கோபமாகக் கேட்ட முதல்வர், ‘நான் உடனே வீட்டுக்குச் செல்லவேண்டும்’ என்று சொல்கிறாராம்.

9. சிறுநீரகத் தொற்று சரி செய்யப்பட்டு விட்டதா?

சிறுநீரகக் கிருமித் தொற்று இன்னொரு முறை தாக்கினால், சிறுநீரக செயல் இழப்பு ஏற்படலாம். அதன் பிறகு, சிறுநீரகத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்படுமாம். ஆனால், அதுபோன்ற அறுவைச்சிகிச்சைக்கு ஜெயலலிதாவின் உடல்நிலை இடம் கொடுக்காது என்ற எச்சரிக்கைத் தகவலையும் மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்தாக வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சிங்கப்பூர் செல்வது உறுதி என்கிறார்கள். அமெரிக்காவை விட சிங்கப்பூர் செல்வதுதான் நல்லது என்றும் நினைக்கிறார்களாம்.

10. வேறு ஏதாவது பிரச்னை இருக்கிறதா?

முதல்வருக்கு சளித் தொந்தரவு, மன அழுத்தம் உள்ளன. தொடர்ந்து ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாமல் போனால், உள்உறுப்புகள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து பாதிப்புக்கு உள்ளாகும். சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம், இன்சுலின் செயல்திறன் குறைவு அல்லது போதுமான சுரக்காததுதான் காரணம். மிகுதியான மன அழுத்தம் இருந்தாலும்  இன்சுலின் திறன் பாதிக்கும். தொடர்ந்து உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது அதைத் தவிர்க்க சிறுநீரகம் அதிக அளவில் சிறுநீரை உற்பத்தி செய்யும். இதனால், உடலில் நீரிழப்பு ஏற்படும். இந்த சர்க்கரை அளவுதான் ரத்த நாளங்கள் மற்றும் சிறுநீரகத் தசைகள் ஆகியவற்றை அடுத்தடுத்து பாதிக்கும். மருந்து கொடுத்தாலும் அதில் இருக்கும் பின்விளைவுகள் ஒன்றுக்கு ஒன்று கட்டுப்படுத்தமுடியாமல் செய்யும்.

Leave a Reply