தமிழகத்திற்கு மேலும் 3 நாட்களுக்கு 6000 அடி காவிரி தண்ணீர். சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் ஏற்கனவே தமிழகத்திற்கு சாதகமாக இரண்டு உத்தரவுகளை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த நிலையில் இன்று மீண்டும் ஒரு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி மேலும் மூன்று நாட்களுக்கு தமிழகத்துக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பின்னரும் காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டது.
அதுமட்டுமின்றி காவிரியில் தண்ணீர் திறந்து விட உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனு தேவையற்றது என்றும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி, காவிரியில் நீரை திறந்துவிடும் வரை கர்நாடகாவின் மனு மீது விசாரணை நடத்தப்படக் கூடாது என்றும் தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாளையும், நாளை மறுநாளும் கூடுதலாக இரண்டு நாட்களுக்கு காவிரியில் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே அளிக்கப்பட்ட தண்ணீர் திறப்புக்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைவதை அடுத்து கூடுதலாக 3 நாட்கள் தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கர்நாடக அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த உத்தரவு குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி தண்ணீரை பெறுவது குறித்த நடவடிக்கைகள் குறித்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா அரசு உயரதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார்.