முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் லண்டன் மருத்துவர் இவர்தான்
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த சில நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது சிகிச்சைக்காக லண்டனில் இருந்து மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பீலே என்பவர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் பல வருடங்கள் அனுபவம் வாய்ந்த இவர், நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதில் திறன் பெற்றவர் என்றும் இவருடைய வருகைக்கு பின்னர்தான் ஜெயலலிதாவின் உடல்நிலை தேறி வருவதாகவும் கூறப்படுகிறது.
லண்டன் பிரிட்ஜ் மருத்துவமனையைச் சேர்ந்த ரிச்சர்ட் ஜான் பீலே, சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தவுடன், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் முதல்கட்டமாக ஆய்வு செய்தார். பின்னர் அவருக்கு மேலும் சில மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள மருத்துவர் ரிச்சர்ட் பரிந்துரை செய்ததாகவும், அதன்படி அப்பல்லோ மருத்துவர்கள் அந்த பரிசோதனைகளை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், ஜெயலலிதாவுக்கு தற்போது மிகச் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை அதிமுக அமைப்புச் செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரனும் உறுதி செய்துள்ளார்.