முதல்வர் உடல்நிலை குறித்து பேசினாலே கைதா? ராமதாஸ் கண்டனம்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே காவல்துறை அறிவித்துள்ள நிலையில் அதையும் மீறி சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது காவல்துறை கைது நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் முதல்வர் உடல்நிலை பற்றி பேசினாலே கைது செய்வது ஜனநாயகத்திற்கு அழகல்ல என்று பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பேசியதற்காக கோவையைச் சேர்ந்த வங்கி ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இத்தகைய கைதுகள் எதையோ திசை திருப்பவும், யாரையோ அச்சுறுத்தவும் செய்யப்படுகின்றனவோ என்ற ஐயம் எழுகிறது.
,
கடந்த 6-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனை விரிவான மருத்துவ அறிக்கையை வெளியிட்ட பிறகு முதலவர் குறித்த வதந்திகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விட்டது. ஆனாலும், முதலமைச்சரின் உடல்நிலை குறித்து பொதுமக்கள் உரையாடுவது தொடர்கிறது. இது இயல்பான ஒன்று தான். இதற்காக வழக்குப் பதிவு செய்து மக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது என்பது சிறுபிள்ளைத்தனமான செயலாகும்.
முதலமைச்சரின் உடல்நிலை குறித்து 5 நாட்களாக எந்த மருத்துவ அறிக்கையும் வெளியிடப்படாத நிலையில், ஒவ்வொருவரும் தாங்கள் கேள்விப்பட்ட தகவல்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தடுக்க முடியாது.
உள்நோக்கத்துடன் முதல்வரின் உடல்நிலை குறித்தும், மாநிலத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் திட்டமிட்டு வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாதது. ஆனால், முதலமைச்சரின் உடல்நிலை குறித்து வங்கியில் பேசிக் கொண்டிருந்தார்கள், தெருமுனையில் பேசிக் கொண்டிருந்தார்கள் என்று அதிமுகவினர் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் கைது செய்வது அரசியல் பழிவாங்கலுக்கும், அடிப்படை மனித உரிமைகள் நசுக்கப்படுவதற்கும், ஜனநாயக படுகொலைக்கும் வழி வகுத்துவிடும்.
எனவே, முதலமைச்சரின் உடல்நிலை குறித்து பேசியதற்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். முதலமைச்சரின் உடல்நிலை குறித்த உண்மைகளை அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கையாக தினமும் வெளியிட்டு முதலமைச்சரின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவுவதை அரசு தடுக்க வேண்டும்” என்று தனது அறிக்கையில் ராமாதாஸ் தெரிவித்துள்ளார்.