ஷீரடி செல்வோர் விஐபி பாஸ் வாங்க பரிந்துரை கடிதம் சமர்ப்பிக்க வேண்டியதில்லை’
ஷீரடி சாய்பாபா கோவில் செல்வோர், சாமி தரிசனம் செய்ய விஐபி பாஸ் வாங்குவதற்கு பரிந்துரை கடிதம் எதுவும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று, அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தசரா பண்டிகையை ஒட்டி இந்த சிறப்பு அறிவிப்பை நடைமுறைப்படுத்தி உள்ளதாக, ஷீரடி சாய்பாபா கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாள்தோறும் சராசரியாக, 50,000க்கும் அதிகமான பக்தர்கள் சாய்பாபா கோவிலுக்கு வருகின்றனர். இதனால், கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக, சாமி தரிசனம் செய்ய, விஐபி பாஸ் வாங்க வேண்டும்.
அதற்காக, பரிந்துரை கடிதம் ஒன்றையும் சிறப்புக் கட்டணம் செலுத்தி வாங்க வேண்டியுள்ளது. இதனால், பலருக்கும் சாமி தரிசனம் செய்வதில் நேர விரயம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, விஐபி பாஸ் வாங்க பரிந்துரை கடிதம் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்றும், உரிய கட்டணம் செலுத்தினாலே, விஐபி பாஸ் வழங்கப்படும் என்றும் ஷீரடி சாய்பாபா கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தசரா பண்டிகை முதலாக, இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக, டீ, காஃபி, பால் மற்றும் பிஸ்கட் போன்றவையும் விநியோகிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.