வீட்டு கடன் பெறுவதில் தாமதம் உண்டாக்கும் காரணங்கள்
வீடு கட்ட கடன் பெற நினைத்து விண்ணப்பிக்கும் அனைவருக்கும் எளிதாக வீட்டு கடன் கிடைத்து விடுவதில்லை. பல நடைமுறைகளை கடந்துதான் வீட்டுக்கடன் விண்ணப்பம் வங்கியால் ஏற்றுகொள்ளப்பட்டு கடன் வழங்கப்படுகிறது. வீட்டுக்கடன் தரப்படுவதில் உள்ள நடைமுறைகள் எளிமையாக இருப்பதுபோல தோன்றினாலும், வங்கிகளின் நடைமுறை பலருக்கும் சிரமமாக தோன்றுகிறது. வீட்டுக்கடன் பெறுவது எதனால் தாமதமாகிறது..? என்பது பற்றி நிதி ஆலோசகர்கள் தரும் குறிப்புகளை இங்கே காணலாம்.
ஆரம்பத்தில் நிராகரிக்கப்படுதல் :
சிலரது கடன் விண்ணப்பங்கள் ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்படுவது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், கடன் தரும் நிறுவனத்தின் தேவைகள் மற்றும் கடன் பெற விண்ணப்பிப்பவர் தகுதி ஆகியவற்றில் இருக்கும் முரண்பாடுகள்தான் முக்கிய காரணம். அதாவது, வயது, வங்கிகள் நடத்தும் கள ஆய்வுகளில் திருப்தியான முடிவு கிட்டாதது, முறையான ஆவணங்கள் இல்லாதது, சம்பந்தப்பட்டவரின் வருமான வரம்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் அந்த நிராகரிப்புக்கு காரணமாக இருக்கின்றன.
எப்படி சரி செய்வது..?
ஆரம்ப கட்ட நிராகரிப்புகளை தவிர்க்க வங்கிகள் விரும்பும் தகுதிகளை பூர்த்தி செய்யவேண்டும். விண்ணப்பிப்பவரது தகுதிகளை ஏற்றுக்கொள்ளும் வங்கிகளை சரியாக தேர்ந்தெடுத்து விண்ணப்பம் செய்வது அவசியம். முறையான ஆவணங்கள், கச்சிதமான விபரங்கள் ஆகியவற்றை சரியாக வங்கியில் தருவதும் முக்கியம்.
முழுத்தொகை கிடைக்காது :
வங்கிகளை பொறுத்தவரை கடன் வாங்குபவர் அதை திருப்பி செலுத்தும் தகுதி உள்ளவராக இருக்கவேண்டும் என்பது முக்கியம். வங்கிகள் கடனுக்கான அதிகபட்ச தொகையை நிர்ணயிக்கும்போது ஒருவரது மற்ற தகுதிகளையும் பார்க்கின்றன. கடன் நிலுவை, நிதி வரலாறு, விண்ணப்பதாரரின் மாத வருமானம், பழைய கடனை திரும்ப செலுத்திய விதம், ‘கிரெடிட் கார்டு’ பயன்பாடு, ‘செக் பவுன்ஸ்’, வங்கியில் உள்ள சேமிப்பு, தற்போதைய பணியில் மீதமுள்ள காலம் மற்றும் செய்யும் வேலையின் தன்மை ஆகிய விஷயங்கள் கடன் தொகையை நிர்ணயம் செய்கின்றன.
சொத்து மதிப்பில் மாறுபாடுகள் :
சொத்தின் மதிப்பாக நம்மால் குறிப்பிடப்படுவதை வங்கிகள் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் அவற்றிற்கான வழிமுறைகளில் சொத்துக்களை மதிப்பீடு செய்கின்றன. அதற்கு தொழில்நுட்ப அறிஞர்கள் மற்றும் நிதி மதிப்பீட்டு நிபுணர்கள் அடங்கிய குழு சொத்தின் மதிப்பை நிர்ணயம் செய்யும்.
வட்டி விகிதம் :
‘பிக்ஸ்டு இன்ட்ரஸ்ட் ரேட்’ சிறந்ததா..? அல்லது காலத்திற்கேற்ப மாறும் ‘புளோட்டிங் இன்ட்ரஸ்ட் ரேட் சிறந்ததா..? என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். நிலையான வட்டி விகிதத்தில் ஒருவர் கடன் பெறுகிறார் என்றாலும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நிலையான வட்டி விகிதத்தில் மாற்றங்கள் இருக்கலாம் என்ற விஷயத்தை கவனிக்க வேண்டும். மேலும், ‘புளோட்டிங்’ வட்டி விகிதங்களில், வட்டி குறையும் சந்தர்ப்பங்களில் சிறிய அளவில் பலன்கள் கிடைக்கும் நிலையும் இருக்கும். அதனால் வீட்டு கடன்களுக்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கவனமாக படித்து சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வது நல்லது.
‘டவுன் பேமண்ட்’ :
வீட்டுக் கடனில் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை செலுத்துவது ‘டவுன் பேமண்ட்’ ஆகும். ஒவ்வொரு வங்கிக்கும் வித்தியாசப்படும் என்ற நிலையில் ரூ.10 லட்சம் வீட்டுக் கடன் பெறும்போது அதில் ரூ.1 லட்சம் அல்லது ரூ.2 லட்சம் அளவுக்கு ‘டவுன் பேமண்ட்’-ஆக இருக்கலாம். கடன் பெறும் சமயத்தில் இந்த தொகை கையில் இருப்பது அவசியம். மேலும், சந்தை மதிப்பைவிடவும் குறைந்த அளவில் வங்கி ஒருவரது சொத்தை மதிப்பீடு செய்தால் மீதம் இருக்கும் தொகையை கடன் பெறுபவர் செலுத்தவேண்டும். அதனால் சொத்தை முன்னதாக சுய மதிப்பீடு செய்து உத்தேச தொகையை கையில் வைத்திருப்பது நல்லது.
தடையில்லா சான்று மற்றும் பத்திரங்கள் :
‘டைட்டில் டீடு’ மற்றும் ‘தடையில்லா சான்று’ ஆகியற்றை வங்கி கேட்கும் வடிவங்களில் கொடுக்க வேண்டியது அவசியமாகும். அவற்றை சரியான வடிவங்களில் மற்றும் சரியான நேரங்களில் தராமல் இருந்தால் வீட்டுக் கடன் கிடைப்பதில் தாமதம் ஆகும். அதனால், வங்கிகள் எதிர்பார்க்கும் சகல ஆவணங்களையும் விசாரித்து தயாராக வைத்திருந்து ஒப்படைப்பதும் அவசியம்.