தூத்துக்குடி, வேப்பலோடை அரசு ஐடிஐ-களில் பணிமனை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்’
தூத்துக்குடி மற்றும் வேப்பலோடை அரசு ஐடிஐ-களில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பதவிக்கு இன சுழற்சி அடிப்படையில் MRAC தொழிற்பிரிவுக்கு தாழ்த்தப்பட்ட அருந்ததியர் பொது பிரிவு முன்னுரிமையற்றவர்களிடமிருந்து நேரடி நியமனம் செய்யும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதேபோல், வேப்பலோடை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பதவிக்கு இன சுழற்சிஅடிப்படையில் Marine Engine Fitter தொழிற்பிரிவுக்கு தாழ்த்தப்பட்ட அருந்ததியர் பொது பிரிவு முன்னுரிமை உள்ளவர்களும், Fashion Design Technolgoy தொழிற்பிரிவுக்கு பொதுப்பிரிவு முன்னுரிமையற்றவர்களிடமிருந்தும் நேரடி நியமனம் செய்யும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் 1.7.2016 அன்று பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் 18முதல் 35 வயது வரையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 18முதல் 32 வயது வரையும், இதர பிரிவினருக்கு 18முதல் 30 வயது வரையும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்டுள்ள தொழிற்பிரிவில் NTC NAC படித்து முடித்திருக்க வேண்டும். NTC NAC இல்லாமல் கூடுதல் கல்வித் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் ஆவர். மேலும் முன் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது பெயர், கல்வித் தகுதி, தொழில்நுட்பக் கல்வி, சாதி, முன் அனுபவ விவரம், முன்னுரிமை ஏதுமிருப்பின் அதன் விவரம், வீட்டு முகவரி மற்றும் செல்லிடப்பேசி எண் ஆகிய விவரங்களை விண்ணப்பத்தில் தெரிவித்திருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அக். 31 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோரம்பள்ளம், தூத்துக்குடி 628 101 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0461-2340133 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் தேர்வுக் குழுவினரால் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு அனுப்பப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.