‘காஷ்மோரா’ திரைவிமர்சனம். கார்த்தியின் ரசிகர்களுக்கு கஷ்டகாலம்

‘காஷ்மோரா’ திரைவிமர்சனம். கார்த்தியின் ரசிகர்களுக்கு கஷ்டகாலம்

kashmoraகார்த்தி முதன்முதலாக மூன்று வேடங்களில் நடித்துள்ள ‘காஷ்மோரா’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று வெளிவந்துள்ளது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்துள்ளதா? என்றால் வருத்தமான மனதுடன் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியதுள்ளது.

பில்லி சூனியம் ஓட்டும் போலி மந்திரவாதி காஷ்மோரா (கார்த்தி). இவருக்கு துணையாக அப்பா விவேக், தங்கை மதுமிதா மற்றும் அம்மா, பாட்டி ஆகியோர் உள்ளனர். தன்னை எதிர்ப்பவர்கள் அனைவரையும் போட்டு தள்ளும் மோசமான அரசியல்வாதியும், அமைச்சருமான ஒருவர் காஷ்மோராவை ஒரு பிரச்சனை தீர்க்க அணுகுகிறார். கார்த்தியும் அவரது பிரச்சனையை தீர்க்க உதவ, அவர் மேல் அமைச்சருக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்படுகிறது.

இந்நிலையில் திடீரென ஒருநாள் அமைச்சரின் வீட்டில் ரெய்டு வரவுள்ளதாக செய்தி வெளியாக அதிர்ச்சியான அமைச்சர் தான் பதுக்கி வைத்திருந்த ரூ.500 கோடியை காஷ்மோரா வீட்டில் வைக்கின்றார். இந்த பணத்தை காஷ்மோரா எடுத்து கொண்டு வெளிநாடு செல்ல திட்டமிட்டபோது ஒரு அமானுஷ்ய சக்தி காஷ்மோரா குடும்பத்தை ஒரு பாழடைந்த அரண்மனைக்கு இழுத்து கொண்டு வருகிறது. இதன்பின்னர் நடப்பது என்ன? என்பதை நகைச்சுவை மற்றும் சில இடங்களில் பயத்துடன் கூறியுள்ளார் இயக்குனர் கோகுல்

கார்த்திக்கு மூன்று வேடம். காஷ்மோரா வேடம் ஏற்கனவே பல படங்களில் நடித்த காமெடி கலந்த திருட்டுத்தன கேரக்டர். ராஜ்நாத் கேரக்டரை படம் வெளிவருவதற்கு முன்பு ஓவர் பில்டப் கொடுத்தார்கள். இந்த கேரக்டரில் மொட்டைத்தலை தவிர வேறு எதுவுமே புதுமை இல்லை. இந்த கேரக்டருக்குரிய வில்லத்தனம், நயவஞ்சத்தனம் எதுவுமே கார்த்தியின் நடிப்பில் இல்லை. மூன்றாவது கேரக்டர் பேய் கேரக்டர். தொப்பியை கழட்டி வைப்பது போல் அவ்வபோது தலையை கழட்டி வைக்கும் காமெடி கேரக்டர்.

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை அனேகமாக கோகுலை தவிர வேறு யாரும் இந்த அளவுக்கு வீணடித்திருக்க முடியாது. ஒரு திறமையான நடிகையை ஒரே ஒரு பாடல் ஒருசில சுமாரான காட்சிகள் மட்டுமே கொடுத்துள்ளதை அவரது ரசிகர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

ஸ்ரீதிவ்யாவும் இந்த படத்தில் நடித்துள்ளார். இதை தவிர இவரது கேரக்டரை விமர்சிக்க வார்த்தை இல்லை. படத்தின் ஒரே ஆறுதல் விவேக், மதுமிதாவின் நகைச்சுவை. போலிச்சாமியாராக வரும் விவேக் காமெடியில் பின்னி எடுக்கின்றார்.

‘நெருப்புடா’ புகழ் சந்தோஷ் நாராயணனுக்கு சரக்கு தீர்ந்து போச்சா என தெரியவில்லை. ஒரு பாடல் கூட மனதில் தங்கவில்லை. படத்தில் திகில் காட்சி பெரிதாக இல்லாததால் பின்னணி இசையும் சுமாராகத்தான் உள்ளது. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் கச்சிதம்.

இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற சுமாரான படத்தை இயக்கிய கோகுல், ஒரு பெரிய பட்ஜெட் படத்தை இயக்க தகுதியானவர்தானா? என்பதை தயாரிப்பாளர்கள் முதலிலேயே யோசித்திருக்க வேண்டும். திரைக்கதையில் பல இடங்களில் ஓட்டை.

மொதத்தில் காஷ்மோரா’ படம் பார்த்தவர்களை கஷ்டப்படுத்தியுள்ளது.

Leave a Reply