மேனகாவின் பேச்சை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. பாஜக உறுப்பினரின் சர்ச்சை பேச்சு
கேரளாவில் கடந்த சில மாதங்களாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் வெறிநாய்களை கொல்லவும், மற்ற தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யவும் அம்மாநில முதல்வர் பினராயி உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா தெருநாய்களைக் கொல்வதை தவிர்த்துவிட்டு அவைகளுக்கு கருத்தடை செய்வதே சிறந்த வழிமுறை என்றும் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி அவருடைய அறிவுரையின் பேரில், நாய்களை கொல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அம்மாநில காவல்துறை நடவடிக்கை எடுத்து வந்தது.
இந்நிலையில், கேரள சட்டசபையில் பேசிய பாஜக மூத்த எம்.எல்.ஏ ராஜகோபால், மேனகாவின் பேச்சைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அது அவரின் தனிப்பட்ட கருத்து. அரசு நடவடிக்கைக்கு அவரது கருத்து தடையாக இருக்காது’ என்று கூறினார்.
பாஜக மூத்த அமைச்சரான மேனகாவின் பேச்சைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என பாஜக உறுப்பினர் ஒருவரே கூறியுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.